ஈரான் தழைநகர் தெஹ்ரானில் கடந்த திங்கள்கிழமை அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து குடியிருப்பு பகுதியில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 சிறுமிகள், 2 சிறுவர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் இதில் ஈரான் ராணுவ பிரிவான புரட்சிகர காவல் படையின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி கொல்லப்பட்டார்.
அதேபோல அன்றைய தினத் தாக்குதலில் தெஹ்ரானில் உள்ள பழமையான மற்றும் புகழ்பெற்ற ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் குறிவைக்கப்பட்டது. குண்டுவீச்சில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடங்கள் கடும் சேதமடைந்தன.
பல்கலைக்கழக வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் நடைபெற்று வருவதால், ஷெரீப் பல்கலைக்கழகத் தாக்குதலில் மாணவர்கள், ஆசிரியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு மையக் கட்டடம் மற்றும் அங்கிருந்த முக்கியமான தரவுத்தளங்கள் கிட்டத்தட்ட முழுமையான சேதத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மற்றும் ஆன்லைன் சேவைகள் முடங்கியுள்ளன.
இந்நிலையில் ஈரானின் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சியை முடக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தி வருவதாக ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவர் மசூத் தஜ்ரிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பெர்சிய மொழியில் ஏஐ மாடல்களை உருவாக்கும் பணியில் பல்கலைக்கழகம் ஈடுபட்டு வந்தது. இந்த உள்நாட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தஜ்ரிஷி தெரிவித்துள்ளார்.
இது வெறும் ராணுவத் தாக்குதல் அல்ல, ஈரானின் முன்னேற்றத்தின் அடையாளங்களைத் தகர்க்கும் முயற்சி என அவர் சாடியுள்ளார்.
ஷெரீப் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, நூறு ஆண்டுகள் பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான பாஸ்டர் இன்ஸ்டிடியூட், ஷாஹித் பெஹெஷ்டி பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள Photonics ஆய்வகம், ஈரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் செயற்கைக்கோள் மேம்பாட்டு ஆய்வகம் ஆகியவையும் கடந்த வாரங்களில் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஈரான் தனது உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் மூலம் சாதிப்பதையும், சர்வதேசத் தடைகளைத் தாண்டி வளர்வதையும் அமெரிக்கா விரும்பவில்லை என்பதே ஈரான் கல்வியாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இன்றைய ஏஐ யுகத்தில் உலகமேதலைகீழ் மாற்றத்திற்கு உள்ளாகிவரும் வேளையில் அந்த ஏஐ யாரிடம் இருக்க வேண்டும், இருக்க கூடாது என்பதும் சேர்த்தே தீர்மானிக்கப்படுவது எது மாறினாலும் அதிகார மையங்களில் சர்வாதிகார போக்கு மாறாது என்பதற்கு இந்த நிகழ்வு உதாரணமாக அமைந்துள்ளது.
