நாள் 3
‘கற்றது கை மண் அளவு… கல்லாதது உலகளவாச்சே?’ – கிரெடிட் கார்டுகளைப் பற்றி தெரிந்துகொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.
அவற்றை விளக்குகிறார் முன்னாள் வங்கியாளர் மற்றும் செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்.
“கிரெடிட் கார்டு என்பது கடனே இல்லை. இது ஒரு Revolving Credit (சுழற்கடன்).
அதாவது, கார்டை ஸ்வைப் செய்து இப்போது ஒரு தொகையை வாங்கியிருக்கிறீர்கள். அதைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டினால் வட்டி கிடையாது.
அதைத் தாண்டினால்தான், அதிக வட்டி… நெருக்கடி போன்ற பிரச்னை. அது என்ன நெருக்கடி என்பதை நேற்றைய அத்தியாயத்தில் தெரிந்துக்கொண்டோம்.
சுழற்கடனை நம்ம வழக்கு மொழியில் சொல்ல வேண்டுமானால், ‘கைமாத்து’ என்று சொல்லலாம்.
கைமாத்தாக வாங்கும் கடன் மூலம் வங்கிகளுக்கு என்ன லாபம் என்று தானே யோசிக்கிறீர்கள்?
பொதுவாக வங்கிகள் வட்டி, கட்டணங்கள், கமிஷன்கள் மூலம் வருமானம் பார்க்கின்றன.
சில வங்கிகள் கிரெடிட் கார்டுகளுக்குக் கட்டணங்கள் வசூலிக்கின்றன. அது மூலம் வங்கிகளுக்கு ஒரு வருமானம்.
இன்னொன்று, அனைவருமே டியூ தேதியில் கடனைக் கட்டிவிடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது அல்லவா? அதனால், அப்படியும் வங்கிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

யார் கிரெடிட் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம்?
நல்ல மற்றும் நிலையான வருமானம் உள்ளவர்கள்… நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கிரெடிட் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனால், நீங்கள் எவ்வளவு லிமிட்டிற்கு கிரெடிட் கார்டு வாங்குகிறீர்கள்… பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
உங்கள் மாத வருமானத்தில் மொத்த கடன் மற்றும் கிரெடிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளுக்குச் செல்லும் தொகை 20 – 25 சதவிகிதத்தைத் தாண்டிவிடவே கூடாது.
அதற்கேற்ற மாதிரி லிமிட்டுடன் கிரெடிட் கார்டு வாங்கிக்கொள்ளுங்கள்.
அதற்கென… பெரிய லிமிட்டிற்கு கிரெடிட் கார்டு வாங்கிவிட்டு குறைந்த அளவிற்குப் பயன்படுத்தி கொள்ளலாமே என்று நினைக்காதீர்கள்.
பெரிய லிமிட் வாங்கிவிட்டால், அதற்கேற்ற மாதிரி செலவு செய்ய மனது தூண்டும். மனம் ஒரு குரங்கு என்பதை மறந்துவிடாதீர்கள் மக்களே.
