ஓட்டுப்போடும் முன் பேரப்பிள்ளைகள் முகத்தை பாருங்க… சீமான் சொல்வது இதுதான்

சென்னை: ‘ஓட்டுப் போடுவதற்கு முன்பு உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் முகத்தை பார்த்து விட்டு செல்லுங்கள். எந்த சின்னத்திற்கு ஓட்டுப் போட்டால், தரமான கல்வி, நல்ல மருத்துவம் கிடைக்கும் என்பதை முடிவெடுத்து ஓட்டுப் போடுங்கள்,’ என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூரில் நாதக வேட்பாளரை ஆதரித்து சீமான் ஓட்டு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது; மற்ற நாடுகளில் போக்குவரத்து, மருத்துவ கட்டமைப்புகள் எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். ஆனால், ஏன் நம் நாட்டில் அது போன்று இல்லை. நம் நாட்டு தலைவர்கள் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக, பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அங்கு எல்லாம், திடக்கழிவை எப்படி மேலாண்மை செய்கிறார்கள், சாலைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது, ஒரு சின்ன சின்ன நாடுகள் எல்லாம் எப்படி நம் நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறார்கள்.வேலையின்மை ஏன்?சோலைவனமான நம் நாட்டில் இருந்து அரபு நாடான பாலைவனத்திற்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைக்கு செல்லும் நிலை ஏன் வருகிறது. நம் மாநிலத்திலேயே ஒன்றரை கோடி வடமாநிலத்தவர்கள் வேலை செய்யும் அளவிற்கு வேலைவாய்ப்புகள் இருக்கும் போது, வேலையின்மை ஏன் வருகிறது? இவர்கள் நுட்பமாக நம்மை உழைப்பில் இருந்து வெளியேற்றுகிறார்கள். ஆயிரம், 2 ஆயிரம், 10 ஆயிரம் தருகிறோம், இலவசமாக பொருட்கள் தருகிறோம், அரிசி, பருப்பு தருகிறோம். ஓட்டுக்கு பணம் தருகிறோம்.

இழிவுஎந்த வேலையை செய்தாலும் இழிவு என்கிறார்கள். கொத்தனார், டீக்கடை, கம்பி கட்டுவது, ஆடு,மாடு மேய்ப்பது, வேளாண்மை செய்வது எல்லாம் இழிவு என்று கற்பித்து உழைப்பில் இருந்து வெளியேற்றுகின்றனர். எந்த வேலையையும் செய்யாமல் இருப்பது தான் இழிவு என்று கற்பிக்க தவறி விட்டனர். அதனால், எல்லா வளங்களும் இருந்தும், நம் நாடு வறுமையில் இருக்கின்றது என்றால், காரணம் அதுதான்.

நீர், நிலம், மலை என அனைத்து வளங்கள் இருந்தும், பசி, பஞ்சம் இருக்கிறது. ஊழல், லஞ்சமே நிர்வாகம் ஆனால், அந்த நாட்டில் பசி, பஞ்சம் தவிர வேலையின்மை, ஏழ்மை நிலையைத் தவிர வேறு எதுவும் மிஞ்சாது.

ஏமாற்று ஆட்சியாளர்கள்

தமிழகத்தில் மட்டும் தமிழக தேர்வாணையத்தில் தேர்வு எழுதி வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் 70 லட்சம் பேர். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகை கொடுக்கிறோம் என்கிறார்கள். ஆனால், அந்தத் தொகையை வைத்து வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். இலவசங்களையும், வெற்று அறிவிப்புகளையும் கொடுக்கும் ஏமாற்று ஆட்சியாளர்களை தொடர்ந்து தேர்வு செய்வது தான் சிக்கல்.

கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை போன்றவை மக்களுக்கான சேவைகளாகும். ஆனால், இவை எல்லாம் தனியாரின் லாபத்திற்காக ஒதுக்கிவிட்டார்கள். அரசிடம் டாஸ்மாக் மட்டும் இருக்கிறது. ஆட்சி சரியில்லை என்று எல்லாருமே சொல்கிறோம். அப்புறம் யார் அவர்களுக்கு ஓட்டு போடுகிறது. முதல் தேர்தலில் 1.1 சதவீத ஓட்டுகள் வாங்கிய கட்சிகள் இருந்ததே இல்லை. ஆனால், நாங்கள் மீண்டும் தனித்து போட்டியிட்டு கொண்டே இருக்கிறோம். இதனால், 8.50 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது.

ஓட்டுப்போடுங்க

நாம் சாப்பிடும் உணவை தந்தது தான் விவசாயி. அதனால், விவசாயி சின்னத்தில் ஓட்டு போடுங்கள். ஓட்டுப் போடுவதற்கு முன்பு உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் முகத்தை பார்த்து விட்டு செல்லுங்கள். எந்த சின்னத்திற்கு ஓட்டுப் போட்டால், தரமான கல்வி, நல்ல மருத்துவம், படிப்புக்கு ஏற்ற வேலை, பெண்களின் பாதுகாப்பு கிடைக்கும் என்று முடிவெடுத்து ஓட்டு போடுங்கள், இவ்வாறு அவர் கூறினார்.

Source link