தேர்தலில் போட்டியிட சீட் தராததால் அதிருப்தி; தேமுதிகவில் இருந்து மீசை ராஜேந்திரன் விலகல்

சென்னை: துணை நடிகரும், தேமுதிகவின் முக்கிய நிர்வாகியுமான மீசை ராஜேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தேமுதிகவில் முக்கிய நிர்வாகியும், செய்தித் தொடர்பாளருமான மீசை ராஜேந்திரன், விஜயகாந்தின் தீவிர விசுவாசி. இவர் கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக அக்கட்சியில் நீடித்து வந்தவர். 3 சட்டசபை தேர்தலில் தேமுதிக வேட்பாளராக களம் இறங்கியவர். நடப்பு சட்டசபை தேர்தலில் போட்டியிட தமக்கு கட்சி தலைமை சீட் ஒதுக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்.

ஆனால், இம்முறை அவருக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந் நிலையில், தேமுதிகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். தமது முடிவை அவர் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா, பொருளாளரும், எம்பியுமான சுதிஷூக்கு கடிதம் வாயிலாக தெரிவித்து இருக்கிறார்.

அந்த கடிதத்தில், கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டுகளுக்கும் மேலாகவும், தேமுதிகவில் 21 ஆண்டுகளும் உழைத்துள்ளேன். இங்கு விசுவாசத்திற்கு இடமில்லை, எனவே, கட்சியில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமது விலகல் குறித்து பேசியுள்ள அவர், வேறு எந்த கட்சியிலும் இணைவது குறித்து எதுவும் ஆலோசிக்கவில்லை. மற்ற கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தால் சேருவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறினார்.

Source link