தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதிதாக களமிறங்கிருக்கும் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக சென்னை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், இன்று (08-04-26) தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக பரப்புரை வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தவெக தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் கூச்சலிட்டபடி விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏராளமான தொண்டர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். ஆனாலும் விஜய்யின் வாகனம் பரப்புரை நடக்கும் இடத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்த பின்பு தூத்துக்குடி பிரச்சாரம் செய்வதற்காக நெல்லை தாழையூத்து பகுதியிலிருந்து தச்சநல்லூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு வர இருக்கிறார். புறவழிச்சாலை வழியாக பிரச்சார வாகனத்தில் விஜய் சென்று கொண்டிருந்த போது ஆபத்தை உணராமல் தலைக்கவசம் இல்லாமல் ஏராளமான தவெக தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை தங்களது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நிலவியது. போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற நிலையில், சாலையை கடக்க முயன்ற ஒரு தவெக தொண்டர் அரசு பேருந்தினுடைய சக்கரத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அந்த நபர் படுகாயமடைந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருக்கிறார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்தல் பரப்புரை செய்வதற்காக பிரச்சார வாகனத்தில் விஜய் சென்று கொண்டிருந்த போது தற்போது வரை 5 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். அரசு பேருந்தில் சிக்கி காயமடைந்த தொண்டர் உள்ளிட்ட 16 பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
