தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலையொட்டி, இஸ்திரி போட்டு வாக்கு கேட்பது, ஜூஸ் போட்டு வாக்கு கேட்பது, ஆம்லேட் போட்டு வாக்கு கேட்பது என வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் கவனம் பெறும் வகையில் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இப்படியாக தமிழ்நாடே தேர்தல் களத்தில் பிஸியாக இருந்து வரும் சூழலில், தேமுதிகவின் முக்கிய நிர்வாகியும், மறைந்த விஜயகாந்தின் தீவிர விசுவாசியுமான நடிகர் மீசை ராஜேந்திரன் தேமுதகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சி தொடங்கி இதுவரை திமுக கூட்டணியில் சேராத தேமுதிக, முதல் முறையாக அக்கூட்டணியில் சேர்ந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, தற்போது அந்த கட்சிகளுடன் சேராமல் திமுகவில் கூட்டணி வைத்திருப்பது அதிமுக – பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதே போல் சில தேமுதிக தொண்டர்களும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில் நடிகர் மீசை ராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாக தேமுதிகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் தீவிர விசுவாசியாக அறியப்படும் இவர், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு தனது விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ‘நான் கேப்பன் மன்றத்தில் 31 ஆண்டு காலமும் தாங்கள் இயக்கத்தில் 21 வருடமும் பல்வேறு பதவி வகித்து பயணன் பண்ணினேன். 3 முறை சட்டமன்றத் தேர்தலில் நின்றேன். தாங்கள் இயக்கத்திற்காக கடுமையாக உழைத்தேன். என் மேல் கட்சிக்காக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையெல்லாம் கேப்டன் என்கின்ற ஒற்றை சொல்லுக்காக நான் ஏற்றுக்கொண்டேன். நான் வகித்த செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து என்னை விடுவிக்கும்படியும் மற்றும் கட்சியிலிருந்தும் விடுவிக்கும்படியும் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவில் இருந்து விலகியதைத் தொடர்ந்து மீசை ராஜேந்திரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்ததும், கட்சியில் இணைத்து கொண்ட அவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகும் அந்த கட்சியில் தொடர்ந்து பயணித்து வந்துள்ளார். தேமுதிகவின் செய்தித் தொடர்பாளராக பதவி வகித்து வந்த அவர், மூன்று முறை சட்டமன்றத் தேர்தல்களில் வேட்பாளராகவும் களம் கண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், திமுகவுடன் முதல் முறையாக கூட்டணி வைத்ததால் அவர் தொடர்ந்து அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்டு வரும் பல்வேறு மாற்றங்கள் மற்றும் தேர்தல் வாய்ப்பு மறுக்கப்பட்ட சூழலில், தனது நீண்டகால அரசியல் பயணத்தை தேமுதிகவில் இருந்து அவர் முடித்துக்கொண்டாதாகக் கூறப்படுகிறது.
