சென்னை: தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவியை பெற, டில்லி செல்லுமாறு, அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
மத்திய அரசின் 2026 – 27ம் ஆண்டுக்கான பட்ஜெட், கடந்த 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு நிதியில், மாநில அரசின் துறைகளுக்கும் நிதி பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. இந்த நிதியில் மக்களுக்கான மானிய திட்டங்கள், கட்டுமானம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழகத்திற்கு, பள்ளி கல்வி, ஜல்ஜீவன் மிஷன் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதியுதவி கோரப்பட்டுள்ளது. ஆனால், சில காரணங்களை கூறி, இந்த திட்டங்களுக்கு கடந்தாண்டு நிதி வழங்கப்படவில்லை.
நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில், தமிழகத்திற்குரிய பங்களிப்பை பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கமாக, மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்ததும், அமைச்சர்கள், துறை செயலர்கள், இயக்குநர்கள் அடங்கிய குழுவினர் டில்லி செல்வது வழக்கம்.
விரைவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமைச்சர்கள் டில்லி செல்வதை தவிர்க்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், துறைகளின் செயலர்கள் டில்லி சென்று, அங்கு தொடர்புடைய துறைகளின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச அரசு அறிவுறுத்தியுள்ளது.
நிதியுதவி பெறுவது தொடர்பான திட்ட அறிக்கைகளை, மத்திய அதிகாரிகளிடம் விரைந்து சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, பல்வேறு துறை அதிகாரிகள், டில்லி செல்வதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
