திருவண்ணாமலை: ‘திராவிட மாடலின் சாதனை பட்டியல் மிக மிக நீளமானது. இபிஎஸ்சின் துரோகப்பட்டியல் அதை விட நீளமானது. சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றமே நடத்தலாம்,’ என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; ஆன்மிக அன்பர்களால் போற்றப்படும் ஊர் திருவண்ணாமலை. கிரிவலம் போகிறவர்கள் இங்கு வருகிறார்களோ, இல்லையோ, இந்த ஸ்டாலின் மாதமாதம் வலம் வந்து கொண்டிருக்கிறேன்.
1957ம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்பு மாநாடு ஆகட்டும், 1967ல் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது, 1963ல் திருவண்ணாமலை பார்லி இடைத்தேர்தலில் வெற்றியாகட்டும், 2021ல் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தொடக்கமாகட்டும். திருவண்ணாமலை திமுகவின் கோட்டை. திருவண்ணாமலையை கருணாநிதி தான் தனி மாவட்டமாக்கினார்.
திமுக ஆட்சியில் திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயர்த்தி இருக்கிறோம். மலைகளும், அருவிகளும் நிறைந்த மாவட்டம் கள்ளக்குறிச்சி. இந்த இரு மாவட்டங்களும் திராவிட மாடல் 2.0க்கு ரெடியா? மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சும்மா கேட்கவில்லை. 5 ஆண்டுகளாக நிறைய திட்டங்களை நிறைவேற்றிய உரிமையில் கேட்கிறேன்.
சாதனைகள் நிறைந்தது தான் திராவிட மாடல். இதற்கு நேர் எதிராக வேதனைகளால் நிறைந்தது அதிமுக. அதனால் தான் ஊர் ஊராகச் சென்று புலம்பிக் கொண்டு இருக்கிறார். அவரும் எதுவும் செய்யவில்லை. நாம் செய்வதையும் அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால், தான் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்வை நடத்தக் கூடாது என்று கோர்ட்டுக்கு சென்றார். ஆனால், அவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் போட்டு அனுப்பி விட்டார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆண்டுதோறும் நடத்தப்படும். முடிந்தால் இபிஎஸ் தடுத்துப் பார்க்கட்டும். இதுபோல,100 நாள் வேலைத்திட்டத்திலும் துரோகம் செய்தவர் தான் இபிஎஸ். இந்தத் திட்டம் எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு தெரியும். ஆனால், மத்திய பாஜ அதை சிதைத்து விட்டது. அவர்கள் வைத்த பெயர் கூட வாயில் நுழைய மாட்டிங்கிறது. சம்பளம் கூட போடவில்லை.
ஆனால், இபிஎஸ் 200 நாள் வேலை கிடைக்கப் போகுது என்று உருட்டுகிறார். பாஜவின் ஏமாற்று திட்டத்திற்கு அடிமையாக இருக்கும் இபிஎஸ் முட்டுக் கொடுப்பதை பார்த்து பார்லியே அதிர்ந்து போய் விட்டது. அண்மையில் கூட நடத்தப்பட்ட எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக திமுக எவ்வளவோ முயற்சிகளை எடுத்தோம். 2 மாதங்களில் தேர்தலை வைத்துக் கொண்டு இந்தப் பணிகளை முறையாக நடத்த முடியாது என்றோம்.
ஆனால், தேர்தலையே ஒரு மாதத்தில் அறிவித்து நடத்துகிறார்கள், எஸ்ஐஆர் பணிகளை முடிக்க முடியாதா? என்று இபிஎஸ் கேட்கிறார். ஏதாவது ஒரு விஷயத்திலாவது டில்லி ஓனர் பக்கம் நிற்காமல், தமிழக மக்கள் பக்கம் நின்று இருக்கிறீர்களா? பாஜ அரசு தமிழுக்கும், தமிழகத்திற்கும் எதிராக செய்யும் ஒரு செயலை ரோஷம் வந்து கண்டித்துள்ளீர்களா?
ஹிந்திக்கும், சமஸ்கிருதத்துக்கும் பூசணிக்காய் அளவுக்கு நிதி ஒதுக்குகிறார்கள். ஆனால், தமிழுக்கு பட்டாணி அளவு கூட இல்லை. 2024 பார்லி தேர்தலின் போது, பாஜ கூட்டணியில் இருந்து வெளியே வந்த போது, 2026 தேர்தலிலும் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னாரே இபிஎஸ், இதுலயும் துரோகம் செய்து விட்டார்.
திராவிட மாடலின் சாதனை பட்டியல் மிக மிக நீளமானது. இபிஎஸ்சின் துரோகப்பட்டியல் அதை விட நீளமானது. சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றமே நடத்தலாம். அதிமுக, பாஜ தனித்தனியாக வந்தாலும் சரி, கூட்டணியாக வந்தாலும் சரி, ரெண்டும் தனித்தனி இல்லை என்பதை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள். மக்கள் கொடுக்கும் தொடர் தோல்வியில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளாத இவர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம், அவதூறு பரப்புவது, இவ்வாறு அவர் கூறினார்.
