நெல்லை: நெல்லை ரோடு ஷோவின் போது தவெக தலைவர் விஜய்க்கு அவரது ரசிகர்கள், தொண்டர்கள் பல அன்பளிப்புகளை கொடுத்தனர். அப்போது கட்சி வண்ணத்தில் அளிக்கப்பட்ட கிடார் ஒன்றை கையில் பிடித்தபடி அவர் வாசித்தார்.
தவெக தலைவர் விஜய் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இன்று தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளார். செல்லும் வழிநெடுகிலும் அவரை கண்டு ஆனந்த கூத்தாடிய ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இம்முறை முற்றிலும் பல்வேறு பரிசு பரிசு பொருட்களை அள்ளிக் கொடுத்து விஜயை திக்குமுக்காட வைத்தனர்.
இதுபோன்ற பிரசார தருணங்களில் வழக்கமாக கட்சிக் கொடிகளை ஈட்டியை இலக்கை நோக்கி குறி வைத்து எறிவது போன்று தொண்டர்கள் வீசுவது உண்டு. ஆனால் நெல்லை தாழையூத்தில் தொண்டர்கள் அளித்த அன்பளிப்பு வகைகள் வேற ரகம்.
குளிர்பானங்கள், பூங்கொத்துகள், கரும்பு, குரான், விஜய்யின் சினிமா கலெக்ஷ்ன் போட்டோக்கள் என அள்ளி தெளித்து ஆச்சரியப்படுத்தினர். அனைத்தையும் பொறுமையாகவும், இன்முகத்துடன் பெற்றுக் கொண்ட விஜய், அவற்றை வாங்கி உள்ளே வைத்துக் கொண்டார்.
இவற்றில் ரசிகர் ஒருவர் நெற்கதிரை பரிசாக வழங்கினார். இதை எதிர்பாராத விஜய் அதை பெற்றுக் கொண்டு இடது மார்பில் வைத்தபடியே வலது கை கட்டைவிரலை உயர்த்தி காட்டியபடியே உற்சாகமூட்டினார். இதென்ன பிரமாதம் என்பது போல் மற்றொரு ரசிகர் கிடார் ஒன்றை அன்பளிப்பாக தர, அதை அடுத்த நொடியே கைகளில் வைத்தபடி வாசிக்க ஆரம்பித்தார் விஜய். அந்த கிடார் கட்சிக் கொடி வண்ணத்தில் இருந்தது தான் ஹைலைட்.
எல்லாவற்றுக்கும் மேலாக, சிறுவன் ஒருவனை தமது கழுத்தின் பின்புறம் அமர வைதது, மாயாஜாலம் காட்ட, அவனும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இரு கைகளையும் அகல விரித்தபடி பரவசம் அடைந்தான். விஜய்யின் இந்த சேட்டை+குறும்பை சுற்றிலும் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரசித்து உற்சாக குரல் எழுப்பினர். தங்கள் செல்போன்களில் அவற்றை படம்பிடித்து, இஷ்டம் போல் சமூக வலைதளங்களில் பதிவேற்றி கொண்டாடினர்.
