தர்மபுரி: “வன்னியர் இட ஒதுக்கீட்டை கெடுத்தது, இன துரோகியான ஜி.கே.மணி. தன் மகனின் நலனுக்காக, என் குடும்பத்தையே பிரித்து விட்டார்,” என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், தர்மபுரி தொகுதிகளில் தே.ஜ., கூட்டணி சார்பாக பா.ம.க, போட்டியிடுகிறது. தர்மபுரி தொகுதியில், அன்புமணியின் மனைவி சவுமியா வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இந்நிலையில், தேர்தல் பணி தொடர்பாக, பா.ம.க., நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில், அன்புமணி பேசியதாவது: தன் மகன் தமிழ்குமரனின் நலனுக்காக, என்னையும், என் தந்தையான பா.ம.க., நிறுவனர் ராமதாசையும், கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜி.கே.மணி திட்டமிட்டு பிரித்தார். நான், எவ்வளவு அவமானங்களை தாங்கிக்கொண்டு இருக்கிறேன், அனைத்துக்கும், ஜி.கே. மணி தான் காரணம்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் கைக்கூலி ஜி.கே.மணி; துணை முதல்வர் உதயநிதியின் கைக்கூலி தமிழ்குமரன். உதயநிதிக்கு இப்போது, ‘ஆல் இன் ஆல்’ தமிழ்குமரன் தான். அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கிய, 10.5 சதவீதம் வன்னியர் இட ஒதுக்கீட்டை, முதல்வர் ஸ்டாலின் மற்றும் மணி இருவரும் சேர்ந்தே கெடுத்தனர்.
மணியின் மகன் தமிழ்குமரன், தி.மு.க.,வில் தான், ‘சீட்’ பெற ஒரு மாதத்திற்கு முன் முடிவு செய்தார். நேரடியாக தி.மு.க-.,வில் ‘சீட்’ கொடுத்தால், ராமதாஸ் குடும்பத்தை ஏமாற்றியது இவர்கள் தான் என்பது, அனைவருக்கும் தெரிந்து விடும் என்பதால், காங்.,கில் தமிழ்குமரனை சேர்க்க வைத்து, பெரிய தொகையை கொடுத்து, பென்னாகரத்தில், ‘சீட்’ வாங்கியுள்ளனர்.
வன்னியர் சமுதாயம் மற்றும் பா.ம.க.,வுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டு, எதுவும் தெரியாதது போல் இருக்கின்றனர். மணியும் அவரது மகன் தமிழ்குமரனும், துரோகங்களை சாதாரணமாக செய்கின்றனர். இதெல்லாம் ராமதாசுக்கு தெரியாது. ராமதாஸின், 45 ஆண்டு உழைப்பை, இந்த நிலைக்கு கொண்டு வந்த துரோகிகளை விரட்டியடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
