சென்னை: ''உண்மையான காங்கிரஸ் கட்சியினர் த.வெ.க.,வுடன் இருப்பதாக, அக்கட்சி தலைவர் விஜய் கூறுவது, அரசியல்

சென்னை: ”உண்மையான காங்கிரஸ் கட்சியினர் த.வெ.க.,வுடன் இருப்பதாக, அக்கட்சி தலைவர் விஜய் கூறுவது, அரசியல் உள்நோக்கம் கொண்ட அப்பட்டமான பொய்,” என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ள கருத்துக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை, தவறானவை மற்றும் அரசியல் உள்நோக்கத்துடன் திரித்துக் கூறப்பட்டவை. காங்கிரஸ் கட்சியை, பணம் அல்லது அதிகாரத்தின் வாயிலாக யாராலும் கட்டுப்படுத்த முடியாது. காங்கிரஸ் கட்சி, தன் கொள்கைகளுக்கும், மக்கள் நலனுக்கும் ஏற்ப செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் காங்கிரசோடு கூட்டணி வைக்க, த.வெ.க., எத்தகைய திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டது என அனைவரும் அறிவர். காங்கிரசில் ஆள் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட த.வெ.க.,விற்கு, விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தான் சிக்கினர். ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

‘உண்மையான காங்கிரஸ் கட்சியினர் த.வெ.க.,வுடன் இருக்கின்றனர்’ என கூறுவதை விட, ஒரு அப்பட்டமான பொய் வேறு எதுவும் இருக்க முடியாது. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட, விஷமத்தனமான, ஆதாரமற்ற குற்றச்சாட்டு. காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்ப்பதை, விஜய் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். அவர் தன், அவதுாறு கருத்துக்களை திரும்ப பெற்று, காங்கிரஸ் கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link