அதிமுக பிரச்சாரத்தில் குத்தாட்டம் போடும் அரசுப்பள்ளி ஆசிரியர்; பறந்த பரபரப்பு புகார்!

தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் கடும் வெயிலில் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்கள் செல்லும் கிராமங்களில் வரவேற்புகளும் எதிர்ப்புகளும் காட்டி வருகின்றனர் வாக்காளர்களான பொதுமக்கள்.

இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆட்டம் பாட்டத்துடன் பிரச்சாரம் நடக்கிறது. அ.தி.மு.க வேட்பாளரின் பிரச்சார பயணத்தின் போது, பொன்னமராவதி வட்டார வளமையத்தில் பயிற்றுநராக பணியில் இருந்து மாற்றுப் பணியில் விராலிமலைக்கு வந்துள்ள சிறப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான பயிற்றுநராக உள்ள பகல்நேர பாதுகாப்பு மைய சிறப்பு ஆசிரியர் ராஜேஷ்கண்ணன், அதிமுக கட்சித் துண்டு அணிந்து பெண்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசுப் பணியில் உள்ள சிறப்பு ஆசிரியர் ஒரு அரசியல் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் நோக்கத்தில் குத்தாட்டம் போடுவது குறித்து தி.மு.க வேட்பாளர் தரப்பில் இருந்து விராலிமலை தேர்தல் பார்வையாளரிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இந்த பயிற்றுநர் ராஜேஷ்கண்ணன், பல வருடங்களாக மாற்றுப்பணியில் விராலிமலைக்கு வந்து பணிக்கு போவதைவிட ஜல்லிக்கட்டு, அரசியல் பணிகள், தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் புகாரில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வித்துறை சிறப்பு ஆசிரியர் ராஜேஷ்கண்ணனுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் கொடுக்க உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

Source link