ஜெருசலேம்:ஈரான் உடனான போர் நிறுத்த முடிவை ஆதரிப்பதாகக் கூறிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்பின், போர் நிறுத்த முடிவை இஸ்ரேல் ஆதரிக்கிறது. ஈரான் உடனடியாக ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு எதிரான அனைத்து தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும்.
மேலும், ஈரான் அணு ஆயுதம், ஏவுகணை மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை இனி ஏற்படுத்தாத வகையில், அமெரிக்கா மேற்கொள்ளும் பேச்சு முயற்சிகளையும் இஸ்ரேல் முழு ஆதரவுடன் வரவேற்கிறது. ஆனால், இந்த இரண்டு வார போர் நிறுத்தம் ஈரானுடன் மட்டுமே பொருந்தும். லெபனான் மீதான தாக்குதல்கள் இதில் அடங்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற, லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. தற்போது அமெரிக்கா துவங்கிய போரால், லெபனான் மேலும் அழிவை சந்தித்து வருகிறது. அங்கு 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; லட்சக்கணக்கானோர் வெளியேறி உள்ளனர்.
