குஜராத் மக்களிடம் மன்னிப்பு கேட்டார் கார்கே

புதுடில்லி: கேரள சட்டசபை தேர்தலையொட்டி, இடுக்கி மாவட்டத்தில், சமீபத்தில் நடந்த காங்., பிரசார கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ‘பிரதமர் மோடி அவர்களே… முதல்வர் பினராயி விஜயன் அவர்களே…

‘குஜராத்திலோ அல்லது மற்ற இடங்களிலோ படிப்பறிவு இல்லாதவர்களை உங்களால் ஏமாற்ற முடியும். ஆனால், கேரள மக்களை ஏமாற்ற முடியாது. அவர்கள் படிப்பறிவு உள்ளவர்கள்; மிகவும் புத்திசாலிகள்’ என்றார்.

கார்கேவின் இந்த பேச்சு, தேசிய அரசியலில் புயலை கிளப்பியது. குஜராத் மக்களை இழிவுபடுத்தி விட்டதாக, பா.ஜ., தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தன் பேச்சுக்கு கார்கே வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரி உள்ளார்.

சமூக வலைதளத்தில் கார்கே வெளியிட்ட பதிவு:

கேரளாவில், தேர்தல் பிரசாரத்தில் நான் பேசிய சில கருத்துகள் வேண்டுமென்றே தவறாக திரித்து வெளியிடப்பட்டுள்ளன. எனினும், அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். குஜராத் மக்கள் மீது எனக்கு எப்போதும் அளவுகடந்த அன்பும், மரியாதையும் உள்ளது. அவர்களை புண்படுத்தும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link