புதுடில்லி: ‘எந்த மாதிரியான அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நீதிபதியாக டாக்டர் விளங்குகிறார்’ என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு தவறான சிகிச்சை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டி, குழந்தைகள் நல டாக்டருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தது.
சென்னையைச் சேர்ந்த தம்பதி, தங்களின் ஒன்றரை வயது மகனின் விதைப்பை குறைபாடுக்கான அறுவை சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அறுவை சிகிச்சையை, குழந்தைகள் நல டாக்டர் பாலகோபால் செய்தார். அதில், ‘பிறப்புறுப்பில் சேராமல் இருந்த மகனின் இடது பக்க விதையை, பையில் சேர்ப்பதற்கு பதில், அதை அகற்றிவிட்டார்’ என , பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
இது குறித்து அம்பத்துார் போலீசில் டாக்டருக்கு எதிராக, கடந்த 2006ல் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார், டாக்டர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் பாலகோபால் தாக்கல் செய்த மனு, 2013ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் டாக்டர் பாலகோபால் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அறுவை சிகிச்சைக்கான ஒப்புதல் படிவத்தில், விதையை கீழிறக்குவது அல்லது அகற்றுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இரண்டில் ஏதாவது ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று தான் புரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தையின் விதையை அகற்றாவிட்டால் எதிர்காலத்தில் விதையின் வீரியம் குறைந்துவிடும் என, மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. எந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நீதிபதியாக, டாக்டர் தான் விளங்குகிறார். எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
