புதுடில்லி, கரீப் பருவத்துக்கான உர மானியமாக 41,534 கோடி ரூபாயை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
மேற்காசிய போரால், சர்வதேச சந்தையில் உரங்களின் விலை உயர்ந்துள்ளதால் உரத்துக்கான மானியம் 12 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு கடந்த கரீப் சீசனில் 37,216 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 41,534 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனைவிட இது 4,317 கோடி ரூபாய் அதிகம்.
இந்த மானிய தொகை உயர்வு, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும். டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் இறக்குமதி, சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்டுக்கான சரக்கு கட்டணம், அமோனியா சல்பேட்டுக்கான இறக்குமதி மற்றும் உள்நாட்டு தயாரிப்புக்கும் மத்திய அமைச்சரவை அனுமதித்துள்ளது.
கொரோனாவுக்கு பிறகு தற்போதைய மேற்காசிய போரால் டி.ஏ.பி.யின் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது.
இருப்பினும் விவசாயிகளை பாதிக்கக்கூடாது என்பதால் மத்திய அரசு 1 மூட்டை டி.ஏ.பி.யை 1,350 ரூபாய்க்கே வழங்குகிறது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
