சென்னை: பாகிஸ்தானுக்கு ஆதரவாக தி.மு.க., – எம்.பி., சல்மா, ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு, பல தரப்பினரிடமும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள தி.மு.க.,வைச் சேர்ந்த சல்மா, ‘பாகிஸ்தானின் தலையீட்டால், ஈரான் மீதான போர் நின்றிருக்கிறது.
சங்கிகள் எப்படி ஜீரணிக்கப் போகிறீர்கள்’ என, பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில், ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று கருத்து பதிவிட்டிருந்தார்.
எம்.பி.,யாக உள்ள ஒருவர் நம் நாட்டின் பிரதமரை கிண்டல் செய்யும் வகையிலும், நம் நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு மூளையாக செயல்படும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கருத்து பதிவிட்டதற்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை அளித்த பேட்டி:
இதே கருத்தை பா.ஜ.,வினர் ஏதாவது மதம் சார்ந்து சொல்லி இருந்தால், எந்த அளவிற்கு இவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவிப்பர். ஆனால், அவர்களின் வேலையே இது தான்.
தி.மு.க., என்றால் வடக்கு, தெற்கு; அந்த மாநிலம், இந்த மாநிலம்; அந்த மொழி, இந்த மொழி; இந்த நாடு, அந்த நாடு என்று, இவர்கள் பிரிவினையை தான் ஏற்படுத்தி கொண்டிருப்பர். அதற்காகவாவது, தமிழகத்தில் தி.மு.க., தோற்கடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் வதந்தி பரப்பும் சல்மா மீது, தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
பதிவு நீக்கம் சல்மாவின் பதிவுக்கு, தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் சல்மாவின் கருத்து, தி.மு.க.,விற்கு எதிராக புயலை கிளப்பி இருக்கிறது.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக தான் வெளியிட்ட பதிவை, சல்மா நீக்கி விட்டார்.
