கால்பந்து: சென்னை அணிக்கு 'ஷாக்'

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் சென்னை அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, வாரணாசியை சேர்ந்த இன்டர் காஷி அணிகள் மோதின. சென்னை அணி கடைசியாக பங்கேற்ற 3 போட்டியில் (1 வெற்றி, 2 ‘டிரா’) தோல்வியடையாத உற்சாகத்தில் களமிறங்கியது.

போட்டி துவங்கிய 3வது நிமிடத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட இன்டர் காஷி வீரர் ஆல்பிரட், ‘எல்லோ கார்டு’ பெற்றார். 24வது நிமிடம் சென்னை அணியின் இம்ரானுக்கும் ‘எல்லோ கார்டு’ கிடைத்தது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதி துவங்கிய முதல் நிமிடத்தில் இன்டர் காஷி அணி வீரர் ஆல்பிரட் (46 வது) கோல் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து மிரட்டிய இவர், 54 வது நிமிடத்தில் சக வீரர் ஆஷிஷ் கொடுத்த பந்தை பெற்றார். அதை அப்படியே வலைக்குள் தள்ளி, இப்போட்டியில் இரண்டாவது கோல் அடித்தார். சென்னை அணியின் சுக்வு, ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+5வது) கோல் அடித்து ஆறுதல் தந்தார்.

முடிவில் சென்னை அணி 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதுவரை விளையாடிய 6 போட்டியில், ஒரு வெற்றி, 2 ‘டிரா’, 3 தோல்வி என, 5 புள்ளிகளுடன் 11வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

Source link