நேற்று சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்திய பங்கு சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி சார்ந்த இ.டி.எப்., முதலீடுகள் 5 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளன.
போர் நிறுத்த அறிவிப்பு காரணமாக, பணவீக்கம் குறித்த அச்சம் குறைந்தது. இதனால், முதலீட்டாளர்கள் மீண்டும் விலை உயர்ந்த உலோகங்களான தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது.
‘எம்.சி.எக்ஸ்.,’ சந்தையில், நேற்று மாலை நிலவரப்படி, ஜூன் மாதத்திற்கான முன்பேர வர்த்தக ஒப்பந்தத்தில் 10 கிராம் தங்கம் விலை 2.20 சதவீதம் அதிகரித்து, 1.53 லட்சம் ரூபாயாக வர்த்தகமானது. அதேபோல, மே மாதத்திற்கான முன்பேர வர்த்தக ஒப்பந்தத்தில், வெள்ளி ஒரு கிலோ 6.40 சதவீதம் அதிகரித்து, 2.46 லட்சம் ரூபாயாக வர்த்தகமானது.
இது குறித்து ‘என்ரிச் மணி’ சி.இ.ஓ., பொன்முடி கூறியதாவது:
ஒட்டுமொத்த சந்தையும் தங்கம் மற்றும் வெள்ளிக்கு சாதகமாக இருப்பதால், தங்கத்தின் விலை 1.55 லட்சம் ரூபாயை தாண்டும் பட்சத்தில், அது விரைவில் 1.60 லட்சம் ரூபாயை தொட வாய்ப்உள்ளது. அதேபோல, வெள்ளி 2.50 லட்சம் ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
