சென்னை: 'தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக, முதல்வரின் செயலர் ஐ.ஏ.எஸ்., உமாநாத்துக்கு எதிரான

சென்னை: ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக, முதல்வரின் செயலர் ஐ.ஏ.எஸ்., உமாநாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யாத நிலையில், அவருக்கு எதிரான வழக்கை எப்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக முதல்வரின் செயலர் பி.உமாநாத்தை, தேர்தல் கமிஷன் உடனே இடமாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பா.ஜ., வழக்கறிஞர் மோகன்தாஸ் மனு தாக்கல் செய்தார். மனு விபரம்:

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், முதல்வரின் செயலர் உமாநாத், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

முதல்வரின் சார்பாக, அனைத்து நிர்வாக பணிகளையும் செயல்படுத்தி வருகிறார். உமாநாத் தொடர்ந்து செயல்பட அனுமதித்தால், தேர்தல் மீதான மக்களின் நம்பிக்கையை, அது முழுதுமாக அழித்து விடும்.

பல ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், முதல்வரின் தனி செயலராக உமாநாத் மட்டும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க கூடாது.

அவரது செயல்பாடுகள், காவல் துறையின் தொடர்பு மற்றும் நிர்வாக செயல்பாடுகள், பிறப்பித்த உத்தரவுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

அலுவலகம், தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான புகார் மனுக்களை பரிசீலித்து, தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, ‘ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யாத நிலையில், இந்த பொது நல வழக்கை எப்படி விசாரணைக்கு ஏற்று கொள்ள முடியும்’ என, கேள்வி எழுப்பினர்.

மேலும், ‘புகார்கள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், அவரை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை’ எனவும் சுட்டிக்காட்டினர்.

அப்போது, ‘வழக்கில் எதிர்மனுதாரராக உமாநாத்தை சேர்க்க அவகாசம் வழங்க வேண்டும்’ என, மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Source link