7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் ஈரானின் கச்சா எண்ணெய் கப்பல்கள்

புதுடில்லி: அமெரிக்காவின் தடையால் ஈரானின் கச்சா எண்ணெயை நம் நாட்டு நிறுவனங்கள் வாங்காமல் இருந்த நிலையில், தற்போது தடை விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து, சீனாவுக்கு சென்ற ஈரான் கச்சா எண்ணெய் கப்பலை நம் நாட்டின், ‘இந்தியன் ஆயில்’ நிறுவனம் வாங்கியுள்ளது.

அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி, ஈரான் மீது அமெரிக்கா சில ஆண்டுகளுக்கு பொருளாதார தடைகளை விதித்தது.

இதையடுத்து, ஈரானுடன் வர்த்தக உறவில் ஈடுபடும் எந்த ஒரு நாட்டின் நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்களுடன் தொழில் நடத்த முடியாதபடி தடை விதிக்கப் பட்டது.

இதன் காரணமாக, நம் நாட்டு நிறுவனங்கள் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை 2019ல் நிறுத்தின. இந்நிலையில், மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரித்தது.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை தடுத்து கச்சா எண்ணெய்க்கு ஈரான் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இது அமெரிக்க பொருளாதாரத்தையும் பாதித்தது. இதன் காரணமாக எங்கெல்லாம் கச்சா எண்ணெய் இருக்கிறதோ அவற்றை வாங்கிக்கொள்ளலாம் என தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

அதன்படி ரஷ்யாவிடம் இருந்து நாம் ஏற்கனவே கச்சா எண்ணெய் வாங்கி வருகிறோம். இந்நிலையில், ஈரானில் இருந்து சீனாவுக்கு, ‘ஜெயா’ என்ற கச்சா எண்ணெய் கப்பல் சென்றது.

அதை நம் நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான, ‘இந்தியன் ஆயில்’ வாங்கியது. இதையடுத்து, அந்த கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து திரும்பி, நம் நாட்டின் ஒடிஷாவில் உள்ள பாரதிப் துறைமுகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

மேலும், ‘ஜோர்டன்’ என்ற மற்றொரு ஈரான் கப்பலும் இந்தியாவை இறக்குமதி மையமாகக் குறிப்பிட்டுள்ளது.

இவை, எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க உதவும்.

Source link