புதுடில்லி: சி.பி.எஸ்.இ., 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பாடம் இடம் பெற்றதற்கு

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பாடம் இடம் பெற்றதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, பாடத்திட்ட தயாரிப்பு குழுவை என்.சி.இ.ஆர்.டி., மாற்றி அமைத்துள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 8ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ‘நீதித்துறை ஊழல்கள்’ என்ற தலைப்பில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய பாடத்தை சேர்த்தது பெரும் சர்ச்சையானது.

‘நீதித்துறை மீது களங்கம் ஏற்படுத்த, திட்டமிட்டு இந்த பாடத்தை சேர்த்தது போல தோன்றுகிறது. நீதித்துறையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், ரத்தம் வழிகிறது’ என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், ‘சர்ச்சைக்குரிய பாடத்தை தயாரித்த பேராசிரியர்கள் அடுத்த தலைமுறைக்கான பாடப்புத்தகங்களை தயாரிக்க தகுதியற்றவர்கள்; இனி அவர்களை பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தக தயாரிப்பில் ஈடுபடுத்தக் கூடாது.

‘மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது; அரசு நிதியுதவி பெறும் கல்விப் பணிகளில் அவர்களை ஈடுபடுத்தக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் – 2 வரையிலான பாடப்புத்தகங்களை வடிவமைக்கும் அதிகாரம் படைத்த 20 பேர் கொண்ட என்.எஸ்.டி.சி., எனப்படும் பாடத்திட்டம் மற்றும் கற்றல் பொருள் குழு தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இக்குழுவில் இருந்து பேராசிரியர்கள் மைக்கேல் டானினோ, சீனிவாசன், மறைந்த பிபெக் டெப்ராய் ஆகியோர் நீக்கப் பட்டுள்ளனர்.

பாடத்திட்டத்தை வலுப்படுத்தவும், மீண்டும் தவறுகள் நிகழ்வதை தவிர்க்கவும் சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குநர் காமகோடி, இந்திய வரலாற்று ஆராய் ச்சி கவுன்சில் தலைவர் ரகுவேந்திர தன்வார், தேசிய சட்டப் பள்ளியின் முன்னாள் துணைவேந்தர் வெங்கட ராவ், என்.சி.இ.ஆர்.டி.,யின் இணை இயக்குநர் அமரேந்திர பிரசாத் பெஹரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது மற்றும் ஏற்கனவே உள்ள பாடத்திட்டங்களில் தேவையான மாற்றங்களை செய்வதற்கு இக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Source link