இ ந்திய பங்கு சந்தைகள், தொடர்ந்து 4வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தன. நேற்று காலை வர்த்தகம் துவங்கும்போது சரிவுடன் காணப்பட்ட சந்தைகள், மதியத்திற்கு மேல் விறுவிறுப்படைந்தன.
தகவல் தொழில்நுட்ப துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகம் வாங்கியது மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல் ஆகியவை, சந்தை மீட்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
நேற்றைய வர்த்தக நிறைவில், சென்செக்ஸ் 510 புள்ளிகள் உயர்ந்து, 74,616 என்ற நிலையிலும்; நிப்டி 155 புள்ளிகள் அதிகரித்து, 23,123 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.
மார்ச் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பை விட சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ‘டி.சி.எஸ்., இன்போசிஸ், எம்பசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல்., டெக் மற்றும் எல்.டி.ஐ., மைண்ட் ட்ரீ’ போன்ற பங்குகள் 4 சதவீதம் வரை உயர்ந்தன. இது சந்தைகளுக்கு ஒரு பலமான அரணாக அமைந்தது.
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு சதவீதம் வரை குறைந்ததும் முதலீட்டாளர்களின் கவலையை குறைத்தது.
இவை தவிர, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரிய சந்தைகளில் நிலவிய ஏற்றம், இந்திய சந்தையிலும் எதிரொலித்தது.
அதேநேரம், மேற்காசிய போர் மற்றும் பணவீக்க சூழலை கருத்தில் கொண்டு, இன்று ரிசர்வ் வங்கி கடன் வட்டி விகித கொள்கையில் மாற்றங்கள் ஏதும் செய்யாது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் காரணமாக வங்கி, நிதித்துறை மற்றும் வாகன துறை சார்ந்த பங்குகள் 1.50 சதவீத சரிவை சந்தித்தன.
