சென்னை: ”எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல், தொகுதி மறுவரையறை தொடர்பாக, எந்த முடிவு எடுத்தாலும், அதற்கு நாங்கள், உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்” என, முதல்வர் ஸ்டாலி ன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த 2001ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததை போல, பிரதமர் மோடியும் செய்ய வேண்டும் என, தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்கு பதில் என்ன?
ஐந்து மாநில தேர்தல்களுக்கு இடையே, அவசர அவசரமாக பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவதற்கு என்ன அவசியம்?
பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரை ஏப்ரல் 29ம் தேதிக்கு பின் கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சி தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?
அனைத்து கட்சி கூட்டம் கூட்டி கலந்தாலோசிக்காமல், மிக முக்கியமான அரசியலைமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி, சர்வாதிகாரமன்றி வேறென்ன?
எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும், அதற்கு நாங்கள், உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்.
தொகுதி மறுவரையறை ஆபத்து, சர்வாதிகாரத்தை நோக்கி இந்திய நகர்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. தென்றலாக இருக்கும் தெற்கை புயலாக மாற்ற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
