கோவை: “கோவை மாவட்ட தி.மு.க.,வை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ளார். தி.மு.க.,வின் தோல்வி, கோவையில் தான் துவங்கும்,” என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவையில் நேற்று அண்ணாமலை அளித்த பேட்டி: தேர்தல் பிரசாரத்தின்போது, தலைவர்கள் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் தவிர்க்க வேண்டும். மக்கள் எல்லாவற்றையும் மனதில் கொண்டு தான் ஓட்டு போடுவர். அரவக்குறிச்சியில் மட்டுமல்ல, கோவையிலும் கேட்டுப்பாருங்கள்; நான், தேர்தலில் வாக்களர்களுக்கு நான் பணம் தரவில்லை.
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜியின் கரூர் தொகுதியை சேர்ந்த, 18 சுயேச்சை வேட்பாளர்களுக்கும் ஒரே நோட்டரி தான் கையெழுத்து போட்டுள்ளார். இந்த முறை செந்தில் பாலாஜியின் தோல்வி மட்டுமல்ல; தி.மு.க.,வின் தோல்வியே கொங்கு மண்டலத்தின் தான் தொடங்கும்; சேப்பாக்கத்தில் முடியும்.
கோவைக்கு கரூரிலிருந்து ஆட்களை கொண்டு வந்து வீதிவீதியாக சென்று 200, 500 ரூபாய், அண்டா, வாட்ச் என கொடுக்கின்றனர். கோவை மாவட்ட தி.மு.க.,வை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பது யார்? தவறாக சேர்த்த பணத்தை, ஓட்டுக்காக வாரி இறைத்து கொண்டிருக்கின்றனர்.
காங்., எம்.பி., ராகுல், புதுச்சேரியில் பிரசாரம் செய்தபோது, தி.மு.க., என்றோ, ஸ்டாலின் என்றோ உச்சரிக்கவே இல்லை. ஸ்டாலினும் அங்குதான் பிரசாரம் செய்தார். அவரும் அங்கு ராகுல் பெயரை சொல்லவே இல்லை. ‘இன்டி’ கூட்டணியில் ஒற்றுமையில்லை; அந்த கூட்டணி பிளவுபட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணி வெற்றி பெருவதை ராகுல் விரும்புவாரா என தெரியவில்லை. த.வெ.க., தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் கடமை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
