வேலுார் மாவட்டத்தில், தே.ஜ., கூட்டணி சார்பில், வேலுார், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம் தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்களும், கே.வி.குப்பம் தொகுதியில் பூவை ஜெகன்மூர்த்தியும் போட்டியிடுகின்றனர்.
பிரசாரத்தின் போது, ‘இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பா.ஜ.,வினர் வரவேண்டாம். அவர்கள் வந்தால் இஸ்லாமியர் ஓட்டுகள் கிடைக்காது’ என அ.தி.மு.க.,வினர் தெரிவித்து உள்ளனர். இதனால், பா.ஜ., தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சி மீது இஸ்லாமியர் அதிருப்தியில் உள்ளனர். அ.தி.மு.க.,விற்கு ஆதரவான மனநிலையிலும் உள்ளனர். ஆனால், பா.ஜ., மீது இஸ்லாமியருக்கு வெறுப்பு உள்ளது. ஏற்கனவே, ராணிப்பேட்டை தொகுதியில் பா.ஜ., சிறுபான்மை அணி தலைவர் வேலுார் இப்ராஹிம் பிரசாரம் செய்ய எதிர்ப்புகள் எழுந்தன. பா.ஜ.,வினருடன் சென்றால் தேவையற்ற சர்ச்சைகள் எழும். கடந்த சட்டசபை தேர்தலிலும் இதே பிரச்னை ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், ‘கடந்த தேர்தலிலும் தோற்றோம்; இந்த தேர்தலிலும் தோற்க போகிறோம்’ என பா.ஜ.,வினர் புலம்பி வருகின்றனர்.
