இது அமெரிக்கா அரசியல் வட்டாரங்களில் டிரம்ப் மீது பெரும் விமர்சனங்களைத் தூண்டியிருக்கிறது,
போருக்கு முன்னர் எல்லா நாடுகளும் சுதந்திரமாக கப்பல்களை செலுத்தத் திறந்திருந்த ஹோர்முஸ் நீரிணையை, டிரம்ப் நடத்திய போரால் இரானின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் செய்ததுதான் டிரம்ப்பின் சாதனையா என்று அரசியல் விமர்சகர்கள் கேட்கிறார்கள்.
பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த சூயஸ் கால்வாயை எகிப்தின் அதிபர் நாசர் 1950களில் கட்டுப்பாட்டில் எடுத்து ஒரு கேந்திர அரசியல் நெருக்கடி ஏற்பட்டு பின்னர் சூயஸ் கால்வாய் எகிப்தின் கைகளுக்குச் சென்ற அதே போன்ற ஒரு சம்பவம் இப்போது ஹோர்மூஸ் நீரிணையில் நடக்கவிருப்பதாக கருத்துகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இந்த சர்ச்சைகள் ஒரு புறமிருக்க, இரான் குறித்த பேச்சுவார்த்தைகள் இரு வார போர் நிறுத்த காலத்திற்குள் முடிவடையுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஏற்கனவே இந்த இடைக்காலப் போர் நிறுத்தம் லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா இலக்குகள் பற்றியதல்ல என்று கூறி, இஸ்ரேல் இன்று ( புதன்கிழமை) அங்கு தனது தாக்குதல்களைத் தொடர்ந்திருக்கிறது.
ஆனால் போர் நிறுத்த உடன்பாட்டில் இரானின் பிராந்தியக் கூட்டாளிகள் மீதும் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்ற இரானின் நிபந்தனையையும் அடங்கும் என்று இரான் கூறுகிறது.
இந்த சூழ்நிலையில் போர் நிறுத்தம் இந்த இரு வாரங்களாவது தாக்குப்பிடிக்குமா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
இந்த வாரமே சம்பந்தப்பட்ட மூன்று நாடுகளையும் இஸ்லாமாபாதில் பேச்சுவார்த்தைகள் நடத்த பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருக்கிறது.
இந்தப் பேச்சு வார்த்தைகள் நடக்கும்போதே இரான் மட்டுமல்லாமல், இஸ்ரேலும் தன்னை ராணுவ ரீதியாக மீண்டும் வலுப்படுத்திக்கொள்ள எத்தனிக்கும். போரின் தன்மை, அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளின் முடிவைப் பொறுத்தே அமையும்.
