“நாங்கள் பேச ஆரம்பித்தால் அவ்வளவு தான்…..”

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, வட சென்னை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கலாநிதி வீரசாமி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து இன்று (09.04.2026) பேட்டியளித்தனர். அப்போது  ஆர்.எஸ். பாரதி பேசுகையில், “அன்றைக்கு கொரோனா பரவல் இருந்த போது மருத்துவமனையிலே போய் பார்த்துவிட்டு வந்த நேரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் குடும்பத்தினரே, அவருடைய துணைவியாரே கதறி அழுதிருக்கிறார்கள். 

அதுமட்டுமல்ல துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினைப் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்த நேரத்திலே உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுங்கள் என்று சொன்னபோது மிகுந்த வேதனையோடு ஒரு நினைவுபடுத்தினார். எங்களுடைய தந்தை கோவையிலே மருத்துவமனையிலே கொரோனா நோயாளிகளைப் பார்த்துவிட்டு வந்த நேரத்தில் அவருக்கு என்ன ஆகுமோ என்ற அச்சமும் பயமும் எங்களுக்கெல்லாம் ஏற்பட்டது. அது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்று சொன்னார். திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் அத்தனை பேரும் கலங்கினோம். 

அப்படிப்பட்ட தலைவரைப் பற்றி எடப்பாடி பழனிசாமி இந்த இந்த அளவுக்குக் கேவலமாகப் பேசுகிறார் என்றால் இது ஒன்றும் புதிதல்ல. காரணம் அவருக்குக் கொலை, கொள்ளை இதெல்லாம் கைவந்த கலை. ஏற்கனவே அவர் தன்னுடைய பங்காளிகளை 1979லேயே மூன்று பேரைக் கொலை செய்த வழக்கில் கொலைக் குற்றவாளியாக இருந்துள்ளார். கொலைக் குற்றவாளியாக வழக்கு நடந்தது. அந்த வழக்கிலே இருந்து எப்படி வெளியே வந்தார் என்பது எல்லாம் எல்லோருக்கும் தெரியும். அந்த பகுதியில் இருக்கிற மக்களுக்கும் தெரியும். அந்த வழக்கின் போது மட்டும் அன்றைக்கு அதிமுக ஆட்சியிலே இல்லாமல் இருந்திருந்தால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி ஆயுள் கைதியாகத்தான் இருந்திருப்பார். 

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அதனுடைய புத்தி போகாது. அதுபோல இவருடைய அந்த கொலைவெறி அந்த உயிரை போக்குகிற அந்த மனப்பான்மை இன்னும் போகவில்லை என்பதை நேற்றைய தினம் அவருடைய பேச்சின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆகவே இப்படி அவர் பேசியதன் மூலமாகத் தமிழ்நாட்டில் இருக்கிற திமுக தொண்டர்கள் எல்லாம் கொதித்துப் போயிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களும் கொதித்துப் போயிருக்கிறார்கள். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை எல்லாம் சமாதானப்படுத்தி இருக்கிறார். இவருடைய பழைய கதைகளை எல்லாம் நாங்கள் பேச ஆரம்பித்தால் அவ்வளவு தான். 

இப்போதுதான் ஒவ்வொரு தீர்ப்பாக வந்து கொண்டிருக்கிறது. இவரால் சாத்தாங்குளத்திலே மூடி மறைக்கப்பட்ட அந்த கொலை வழக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலையிட்டுப் போராடி சி.பி.ஐ. விசாரணை கொண்டு வந்த காரணத்தினால் அண்மையிலே தீர்ப்பு வந்திருக்கிறது. அத்தனை பேருக்கும் மரண தண்டனை என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியிலே நீங்கள் மறைத்த அந்த வழக்குக்கு இப்போது அனைவருக்கும் மரண தண்டனை கொடுத்திருக்கிறது” எனத் தெரிவித்தார். 

Source link