நமது சிறப்பு நிருபர்
புதுச்சேரியில் ஒரே நாளில் பிரசாரம் செய்தும் கூட்டணி தலைவர்களான ஸ்டாலினும் ராகுலும் நேரில் சந்தித்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் நெல்லையில் நடிகர் விஜய்யின் பேச்சு, ஏற்கனவே எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி உள்ளது.
‛‛தவெக தலைவர் விஜய்க்கு அரசியல் அனுபவம் போதாது; பிரசாரமும் பிசுபிசுக்கிறது; பேச்சிலும் முதிர்ச்சி இல்லை” என்று பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. ஆனால் நெல்லை பிரசார கூட்டத்தில் அவர் பேசியது, நல்ல ராஜதந்திரம் என்கின்றனர் விமர்சகர்கள்.
ஏப்.6ம் தேதி புதுச்சேரியில் ஒரே நாளில் திமுக தலைவர் ஸ்டாலினும் காங்., தலைவர் ராகுலும் பிரசாரம் செய்தனர். கூட்டணி கட்சிகளாக இருந்தும், ஒரே யூனியன் பிரதேசத்தில் பிரசாரம் செய்த ஸ்டாலினும் ராகுலும் நேரில் சந்தித்துக்கொள்ளவில்லை. ஸ்டாலினை சந்தியுங்கள் என்று ராகுலுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு ராகுல் மறுத்து விட்டதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.
இதற்கு தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது காங்கிரசை திமுக நடத்திய விதம் தான் காரணம் என்று தெரிகிறது. கூட்டணி பற்றி பேச குழு அமைக்காமல் கடைசி வரை காங்கிரசை திமுக காத்திருக்க வைத்தது, காங்கிரசிற்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
காங்.,கின் தேசிய தலைவர்கள் தவெக கட்சியுடன் கூட்டணி அமைக்க ஒருபுறம் பேச்சு நடத்துவதாக வந்த தகவல் தான் இதற்கு காரணம். ராகுலும் தவெக உடன் கூட்டணியை விரும்புவதாக கூறப்பட்டது. ஆனால் காங்.,கின் தேசிய தலைவர் கார்கே மற்றும் தமிழக தலைவர்கள் திமுக கூட்டணியை விரும்பியதால் குழப்பம் அதிகரித்தது.
இருப்பினும் தமிழக காங்., தலைவர்களின் விருப்பமே கடைசியில் நிறைவேறியது. கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையையும் குறைத்து, கேட்ட தொகுதிகளையும் கொடுக்காமல் திமுக ஏமாற்றிவிட்டது என்பது காங்.,கின் ஆதங்கம். இந்த கோபத்தில் தான் ஸ்டாலினை ராகுல் சந்திக்கவில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
அது மட்டுமல்லாமல் திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் ராகுல் பிரசாரம் செய்வாரா என்பது கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதுவும், அருகில் உள்ள கேரளாவுக்கு சென்று தீவிர பிரசாரம் செய்த ராகுல், தமிழகத்தில் பிரசாரம் செய்யவில்லை. இது திமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் நெல்லை பிரசார கூட்டத்தில் பேசிய விஜய், ‛‛சில பல கோடிகளை கொடுத்து தமிழக காங்கிரசை ஸ்டாலின் சார் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். ஆனால், உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் இருக்கிறது” என்று பேசி, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி மேலும் எரிய வைத்துள்ளார்.
அவரது பேச்சைக் கேட்ட திமுக, ‛‛காங்., ஓட்டு தங்களுக்கு வருமா தவெகவுக்கு போகுமா? தவெகவுக்கும் காங்கிரசிற்கும் மறைமுக உடன்பாடு இருக்குமா? காங்., நமக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதா? என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு ஆவேசப்படுகிறது.
எது எப்படி என்றாலும் தேர்தல் முடியும் வரை திமுகவுக்கும் காங்கிரசிற்கும் சுமூகமான நட்பு ஏற்படாது போல தெரிகிறது. இது மீண்டும் ஆட்சியில் அமர நினைக்கும் திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
