தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், கடந்த 06ஆம் தேதி (06.04.2026) மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மற்றொருபுறம் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. மேலும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சிக்குத் தலைவர், துணை முதல்வர் உதயநிதி இளைஞரணிக்குச் செயலாளர், கனிமொழி கட்சியின் துணை பொதுச் செயலாளர், தயாநிதி மாறன் வர்த்தக அணி செயலாளர் எனப் பதவி வகிக்கின்றனர்.
வேறு என்ன பதவி மீதி இருக்கிறது. நேற்று கொளத்தூர் கூட்டத்தில் நான் பேசினேன். அப்போது, ‘கொரோனா காலத்தில் மக்கள் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அந்த காலகட்டத்தில் ஸ்டாலின், மக்களுக்குச் சரியான ஆலோசனை கொடுக்கவில்லை. இப்போது ஓடோடி சென்று போட்டோ சூட் எடுக்கிறாரே. அப்போது எங்கே காணாமல் போனார்’ என்று சொன்னேன். உடனே புலம்புகிறார் என்னைப் பற்றி தவறாகப் பேசுகிறார் என்று. காணாமல் போனார் என்று தான் சொன்னேனே ஒழிய உங்களைப் பற்றி தவறாக எப்போதும் பேசுவது கிடையாது. அவ்வாறு பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. ஆனால் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் என்னென்ன எல்லாம் பேசினீர்கள்” எனப் பேசினார்.
