தஞ்சாவூர்:
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்
தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கி திருச்சியில் முடித்தார். இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக நெல்லையில் இருந்தும், 3-ம் கட்டமாக கடந்த 6-ந்தேதி புதுச்சேரியிலும் பிரசாரத்தை தொடங்கினார். இன்று மாலை (வியாழக்கிழமை) மறைமலை நகரில் தி.மு.க – கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 4-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தஞ்சாவூரில் இருந்து தொடங்குகிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிற்பகலில் தஞ்சாவூருக்கு வருகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் திலகர் திடலில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதனை முன்னிட்டு தஞ்சை திலகர் திடலில் பொதுக்கூட்டம் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
முதலமைச்சரின் வருகையையொட்டி தஞ்சை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
