அப்போதே தெரியும்… வெற்றி குறித்து சுப்மன் கில் கருத்து

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி- குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 210 ரன்கள் குவித்தது. 211 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லி அணி 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்நிலையில் கடைசி ஓவரில் டேவிட் மில்லர் ரன் ஓட மறுத்ததே குஜராத் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுப்மன் கில் கூறியதாவது:-

நாங்கள் விளையாடிய 3 போட்டிகளுமே கடைசி ஓவர் வரை சென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. 5-வது பந்தில் மில்லர் ரன் ஓட மறுத்தபோதே, இந்த போட்டியில் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துவிட்டது.

கடைசி பந்தில் யார்க்கர் வீசுவதா அல்லது வேகம் குறைந்த பந்தை வீசுவதா என பிரசித் கிருஷ்ணாவிடம் ஆலோசித்தேன். ஆடுகளத்தின் தன்மையை கருத்தில் கொண்டு வேகம் குறைந்த பந்தை வீசினால் அதில் பவுண்டரி அடிப்பது கடினம் என முடிவெடுத்து அதையே செயல்படுத்தினோம்.

இந்த ஆடுகளத்தில் 210 ரன்கள் என்பது 10 முதல் 15 ரன்கள் கூடுதலான ஸ்கோர் தான். டெத் ஓவர்களில் பவுண்டரி அடிப்பது எளிதாக இல்லை. நாம் சரியாக பந்துவீசினால் வெற்றி பெறலாம் என நினைத்தோம். பீல்டிங்கில் ஒவ்வொருவரின் சிறப்பான முயற்சியும் இந்த 1 ரன் வெற்றிக்கு உதவியது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளேன். இப்போது எனக்கு நன்றாக தூங்க வேண்டும்.

என சுப்மன் கில் கூறினார்.

Source link