தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை அறிவித்தும் மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் தேர்தலுக்கான வாக்குறுதிகளை இன்று (09-04-26) வெளியிட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை தமிழக காங்கிரஸ் வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, கார்த்தி சிதம்பரம், திருநாவுக்கரசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். +
‘தமிழ்நாட்டை முன்னேற்றுவோம்’ என்ற தலைப்பில் 10 தலைப்பின் கீழ் 36 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.2,000 வழங்ப்படும், தமிழ்நாட்டை உலகளாவிய ஆன்மீக சுற்றுலா மையமாக மேம்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும், 2030ஆம் ஆண்டிற்குள் 100% நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யப்படும், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ‘டியூஷன் அக்கா’ திட்டம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் படித்த உள்ளூர் பெண்கள் பணியமர்த்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 6 மண்டலங்களிலும் தனிச் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும் அந்த தனிச்சிறப்பு பள்ளிகளில் இருமொழிக் கொள்கை அடிப்படையிலேயே கல்வி கற்பிக்கப்படும், தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் மனநல மருத்துவமனை நிறுவப்படும், மனநலனில் முதலுதவி செய்ய 10,000க்கும் அதிகமான சமூக சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும், அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்ற அடிப்படையில் ரூ.2,000 வழங்க வலியுறுத்திள்ளோம், விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்காக வாரியம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
