புதுடில்லி:தெற்கு டில்லியின் செல்வந்தர்கள் வாழும் வெஸ்டர்ன் அவென்யு பகுதியில் இரண்டு வீட்டு மனைகளை, டில்லி அபிவிருத்தி ஆணைய அதிகாரிகள் உடைத்து எறிந்தனர். இதை, அந்த பகுதியின் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்த்துள்ளனர்.
தெற்கு டில்லியின் சைனிக் பார்ம்ஸ் என்ற இடத்தின் வெஸ்டர்ன் அவென்யு என்ற பகுதியில் சட்ட விரோதமாக இரண்டு வீட்டு மனைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, டி.டி.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு அங்கு கனரக வாகனங்களுடன் குவிந்த டி.டி.ஏ., அதிகாரிகள், அந்த வீட்டு மனைகளை சுற்றி கட்டப்பட்டிருந்த கட்டுமானங்களை இடித்து அகற்றினர்.
இதற்கு, வெஸ்டர்ன் அவென்யு குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் ஹர்தீப் சிங் பல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ”அந்த இடத்தில் அத்துமீறி நுழைந்த டி.டி.ஏ., அதிகாரிகள் அந்த மனைகளை கையகப்படுத்தியுள்ளனர். இதை அனுமதிக்க முடியாது. சட்ட விரோதமாக நடந்த இந்த விவகாரங்கள் குறித்து, நீதிமன்றத்தை நாட உள்ளோம்,” என்றார்.
டில்லியில், 1521 சட்ட விரோத மக்கள் குடியேற்றங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில், பா.ஜ., அரசு இறங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக, ஆன்லைனில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
இதில், முறைகேடாக பிற இடங்களை அபகரித்துள்ள அவென்யுக்கள் மீது டி.டி.ஏ., அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், வெஸ்டர்ன் அவென்யு வசம் இருந்த இரண்டு வீட்டு மனைகள் நேற்று அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டன.
