சென்னை: கட்சிக்குள் யார் யாரெல்லாம் குடைச்சல் கொடுத்தார்களோ, அத்தனையும் இன்று ஆண்டவன் அருளாலும், இரு பெரும் தலைவர்களின் அருளாலும் துடைத்து எறிந்து விட்டோம் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
சென்னை, ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட புஷ்பா நகர், கருமாரியம்மன் கோவில் அருகே தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ் பேசியதாவது: இந்த தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். வாரிசு அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். ஸ்டாலின் சீர்காழியில் மாமானார் வீட்டிற்குப் போனார். நல்ல விருந்து சாப்பிட்டுவிட்டு அப்படியே இருக்க வேண்டியது தானே?
யார் வேண்டாம் என்றது. அங்கு போய் இபிஎஸ்ஸை துடைத்து எறிய வேண்டும் என்று பேசி இருக்கிறார். அத்தனை சாதாரணமானவர்களா அதிமுகவினர்? எங்கள் தொண்டனைக்கூட உங்களால் தொட்டுப்பார்க்க முடியாது. அப்படியிருக்கும்போது, வீட்டை துடைப்பது போல் இபிஎஸ்ஸை துடைத்தெறிய வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
ஜெயலலிலா மறைவிற்குப் பிறகு அதிமுகவை உடைக்கலாம், முடக்கலாம் என்று நினைத்து ஒரு ‘பி’ டீமை உருவாக்கி நீங்கள் சதித் திட்டம் தீட்டினீர்கள். அத்தனையையும் நாங்கள் முறியடித்தோம். எத்தனை வழக்குகள்? இப்போது பி டீம் எங்கு போனார்கள்? குப்பைக்கு போய் விட்டார்கள். அது தான் சரியான வார்த்தை. அவருக்கு என்ன அடையாளம் கொடுத்தோம், எவ்வளவு பொறுப்பை அம்மா கொடுத்தார்கள். அதை எல்லாம் மறந்து சுயநலவாதியாகிவிட்டார். அப்படிப்பட்ட துரோகிகள் எல்லாம் அதிமுகவில் இருந்து துடைத்து எறியப்பட்டார்கள். இப்போது அதிமுக புனிதமாக இருக்கிறது.
கட்சிக்குள் யார் யாரெல்லாம் குடைச்சல் கொடுத்தார்களோ, அத்தனையும் இன்று ஆண்டவன் அருளாலும், இரு பெரும் தலைவர்களின் அருளாலும் துடைத்து எறிந்து விட்டோம். திமுக தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்தது என்று ஸ்டாலின் பேசுகிறார். யார் முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது?
அப்படியென்றால் யார் காப்பி அடித்திருப்பார்கள்? நாம் தேர்தல் அறிக்கை வெளியிட்டு 10 நாட்களுக்குப் பிறகு தான் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. நமது தேர்தல் அறிக்கையை திமுகதான் காப்பி அடித்தது. அதை அப்படியே உருட்டிப் பேசுகிறார் ஸ்டாலின். எவ்வளவு பொய் பேசுகிறார் பாருங்கள். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தைக் கூட முழுமையாக நிறைவேற்றாத அரசு திமுக அரசு. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
