“விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி” – கர்நாடகா துணை முதல்வர் பதிலடி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதிதாக களமிறங்கிருக்கும் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக சென்னை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், நேற்று (08-04-26) தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

திருநெல்வேலியில் பரப்புரை மேற்கொண்ட விஜய், “திமுக கூட்டணி கலகலத்துப் போய் நிற்கிறது. டாப் தனியாக, பாட்டம் தனியாக, ரீப்பர் தனியாக ஜாயிண்ட் தனியாக நிற்கிறது. தனித்தனியாக எல்லாமே அப்படியே ஒட்ட வைத்துக் கொண்டு இருக்கிறார். கூட்டணி கட்சிக்காரர்களே ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டு போட மாட்டார்கள் போல சூழல் இருக்கிறது. சில பல கோடிகளை கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை திமுக பையில் போட்டுக்கொண்டுள்ளது. ஆனால் உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் நிற்கிறது” என்று பேசினார்.

தமிழ்நாடு காங்கிரஸை தவெக தலைவர் விஜய் விமர்சித்திருந்ததை தொடர்ந்து அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்கின்ற வேலையை த.வெ.க. தலைவர் விஜய் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தவறான மற்றும் ஆதாரமற்ற, அவதூறு கருத்துகளை உடனடியாக திரும்பப் பெற்று, காங்கிரஸ் கட்சியினரிடமும், பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் காங்கிரஸ் தெரிவித்தது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யின் விமர்சனத்துக்கு கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை தமிழக காங்கிரஸ் இன்று (09-04-26) வெளியிட்டது. இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பங்கேற்றார். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தமிழக தேர்தல் வாக்குறுதிகளை கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டி.கே.சிவக்குமார், “விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி. அவருக்குப் பக்குவம் என்பதே தெரியாது. ஒருவேளை திரிணாமுல் காங்கிரஸ் அவருடன் இருக்கலாம், அவ்வளவுதான். இந்திய தேசிய காங்கிரஸ் அவருடன் இல்லை. திரிணாமுல் காங்கிரஸ் அவருடன் இருக்கலாம். இந்திய தேசிய காங்கிரஸ் திமுகவுடன் இருக்கிறது… இந்தக் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்கும்” என்று கூறினார். 

Source link