கோவை: ” உதயநிதி தமிழக முதல்வர் ஆக பதவியேற்க மாட்டார் என ஸ்டாலினால் அறிவிக்க முடியுமா என சவால் விடுகிறேன்,” என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுக பாஜ, பாமக அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இணைந்து வளர்ந்த தமிழகம் என்ற நோக்கத்திற்காக பணியாற்றி வருகிறோம். தமிழகம் அசாதாரணமான திறமை கொண்ட மாநிலம். தமிழ் பெருமை, அனைவரையும் கலாசாரம், பாரம்பரியம், வளமான பாரம்பரியத்தின் பெருமையாக கருதப்படுகிறது.
ஆனால், திமுக அரசை ஒற்றை குடும்பம் வழிநடத்துகிறது. ஸ்டாலின்,உதயநிதி, கனிமொழி, சபரீசன் என ஊழல், மோசமான நிர்வாகத்திற்கு பெயர்போனவர்கள், தமிழகத்தை பின்னோக்கி சென்றதற்கு பொறுப்பேற்று கொண்டனர்.
திமுக அரசு, சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியவில்லை. சூழ்நிலை மோசமாகி வருகிறது. இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். டாஸ்மாக்கில் ஊழல் நடந்து வருகிறது. பணியிட மாற்றம் மற்றும் நியமனத்தில் மோசடி நடந்துள்ளது. பணம் பெற்றுக் கொண்டு பணி நியமனங்கள் நடக்கிறது. மாநிலம் மெதுவாக பழைய பெருமைகளை இழந்து வருகிறது.
இந்த தேர்தலில், அரசை விமர்சிப்பவர்களை அச்சுறுத்துகின்றனர். யூடியூபர்கள், சமூக ஊடக பிரபலங்களை அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்காக போலீசை பயன்படுத்துகின்றனர். ஸ்டாலின் குடும்பத்தினரின் தவறுகளை மறைப்பதற்காக விமர்சிக்கும் ஊடகங்களை கேபிள் டிவியில் இணைப்பை துண்டிக்கின்றனர்.கோவையில் அனைத்து துறைகளிலும் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
கடனால் தமிழகம் திணறி வருகிறது. மோசமான நிதி நிர்வாகம் காரணமாக பலவீனமான மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் இரு மடங்கு அதிகரித்துள்ளது. வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.முதலீட்டில் 12 லட்சம் கோடி ரூபாய் என அறிவித்தனர். ஆனால், பேப்பரில் மட்டும் உள்ளது. திமுக அரசு 28 ஆயிரம் தமிழக அரசு போக்குவரத்து பண பலன்களை திருடி உள்ளது. இதனால், அவர்களுகு ஓய்வுக்கு அளிக்கப்பட வேண்டிய பண பலன்கள் வழங்கப்படவில்லை.மத்திய அரசு வழங்கிய நிதி எங்கே சென்றது என தமிழக மக்களுக்கு ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பம் பதில் சொல்ல வேண்டும்.
ஊழல் செய்வதில் மட்டும் திமுக கவனம் செலுத்தி வருகிறது. சட்டவிரோதமாக மது விநியோகம் செய்து டாஸ்மாக்கில் ஊழல் செய்ததற்கும், அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியதற்கும் ஸ்டாலின் குடும்பம் பொறப்பேற்க வேண்டும். நிலம், மணல் மாபியா தமிழகத்தை ஆட்சி செய்கின்றன. தமிழ் கலாசாரம் குறித்து உதயநிதிக்கு புரிதல் இல்லை. தமிழ் பெருமைக்கு அவர் மரியாதை அளிக்க வில்லை. அவரது கருத்துகள் வெட்கப்பட வேண்டியவை. அவருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தங்களுக்கு நல்லது என புரிந்து கொள்ளும் திறன் மக்களுக்கு உள்ளது. உதயநிதியை முதல்வராக்க அனுமதிக்க மாட்டார்கள்.
இந்த தேர்தலில், திமுக தவறுதலாக வெற்றி பெற்றாலும், உதயநிதியை முதல்வராக்குவார்கள். இதனை மக்கள் ஏற்க மாட்டார். உதயநிதி தமிழக முதல்வர் ஆக மாட்டார் என ஸ்டாலின் அறிவிப்பாரா என சவால் விடுகிறேன்.
ஆனால்,அதற்கு ஸ்டாலினிடம் பதில் இருக்காது. உதயநிதியை முதல்வராக்கும் எண்ணம் அவரது மனதில் உள்ளது. தமிழகத்தை உதயநிதி அழித்துவிடுவார் என்பதால், தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
