தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை அறிவித்தும் மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று (09-04-26) கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “வருந்தத்தக்க வகையில், ஸ்டாலின் குடும்பம் என்ற ஒரே குடும்பத்தால் நடத்தப்படும் திமுக அரசு, ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவற்றிற்குப் பெயர் பெற்றதுடன், தமிழகத்தை வீழ்ச்சியடையச் செய்ததற்கும் காரணமாக விளங்குகிறது. திமுக அரசால் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க முடியவில்லை, நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது. போதைப்பொருள் அச்சுறுத்தல் நமது இளைஞர்களைச் சிதைத்து வருகிறது. ஜெயலலிதாஜிவின் ஆட்சிக்காலத்தில் இருந்த பழைய பொலிவை மாநிலம் படிப்படியாக இழந்து வருகிறது.
அவர்கள் அரசை எதிர்க்கும் யூடியூபர்கள், சமூக ஊடகத்தினரை அச்சுறுத்தும் விதமாகவும், அச்ச உணர்வை உருவாக்கவும் காவல்துறையைப் பயன்படுத்துகிறார்கள். ஸ்டாலின் குடும்பத்தின் அத்தனை தவறுகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிடாமல் தடுப்பதற்காக தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை அச்சுறுத்துகிறார்கள். திமுக அரசு, கோயம்புத்தூரை எல்லா மட்டங்களிலும் கைவிட்டுவிட்டது என்பது மக்களுக்குத் தெரியும். சாலைகள் மிக மோசமாக உள்ளன, குடிநீர் விநியோகம் மிகவும் மோசமாக உள்ளது. கடந்த தேர்தலில் திமுக கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 70% நிறைவேற்றப்படாமல் உள்ளன. எரிவாயு சிலிண்டர் மானியம் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர், ஆனால் அது நடக்கவில்லை. பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பு செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தனர், ஆனால் அவர்கள் வரிகளைக் குறைக்கவில்லை.
நாடு முழுவதும் என்.டி.ஏ அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான விற்பனை வரியையும் VAT-ஐயும் குறைத்துள்ளன, ஆனால் தமிழ்நாடு அதைக் குறைக்கவில்லை. கல்விக் கடன்களை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தனர், ஆனால் அதைச் செய்யவில்லை. மூன்றரை லட்சம் அரசு வேலைகள் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர், ஆனால் அந்த அரசு வேலைகள் எங்கே? தமிழ்நாடு மாநிலம் பெரும் கடனில் தத்தளிக்கிறது. பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்தின் காரணமாக, இன்று அது மிகவும் பலவீனமான நிதிநிலை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மாநிலத்தின் கடன்கள் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகியுள்ளன. வருவாய் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வந்ததாகக் கூறினர். ஆனால் அது வெறும் காகிதத் துண்டாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தமாகவும் மட்டுமே இருந்தது. அதில் 9%க்கும் குறைவானவையே உண்மையில் களத்தில் முதலீட்டுடன் செயல்படுத்தப்பட்டுள்ளன” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
