தஞ்சாவூர்: பிரசாரத்தின் போது மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக

தஞ்சாவூர்: பிரசாரத்தின் போது மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக திமுக வேட்பாளர் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடை மருதுார் தொகுதியில், தி.மு.க., சார்பில் அமைச்சர் செழியன், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., இளமதி போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் இளமதி, ஆடுதுறை பேரூராட்சியில் துவங்கி, கோவிந்தபுரம், வண்ணக்குடி உள்ளிட்ட கிராமங்களில பிரசாரம் செய்தார். வண்ணக்குடியில், வெயிலில் பிரசாரம் செய்தபோது, இளமதி திடீரென மயங்கினார்.

அவரை, ஆடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து, வெயிலினால் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது என கூறி சிகிச்சை அளித்தனர். இதையறிந்த தி.மு.க., வேட்பாளரான அமைச்சர் செழியன், மயிலாடுதுறை காங்., எம்.பி., சுதா உள்ளிட்டோர், தங்கள் பிரசாரத்தை பாதியில் நிறுத்தி விட்டு, மருத்துவமனைக்கு சென்று, அ.தி.மு.க., வேட்பாளர் இளமதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

இளமதி கூறுகையில், “எனக்கு சாதாரண தலைச்சுற்றல் தான். சிறிது நேரம் ஓய்வெடுத்த பின், தொடர்ந்து பிரசாரததில் ஈடுபட்டேன். என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.

அ.தி.மு.க., வேட்பாளர் மயக்கமடைந்த தகவல் அறிந்து, தி.மு.க., வேட்பாளர், தன் பிரசாரத்தை நிறுத்தி விட்டு, மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தது, அரசியல் மாண்பு என அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

Source link