கடந்த முறை போன்று விசிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து இந்த முறையும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. தேமுதிகவின் வருகையால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஏகப்பட்ட இழுபறிகள் நீடித்தன. சி.பி.எம், சி.பி.ஐ, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இந்த முறை தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு கடந்த முறையை விட இந்த முறை ஒரு சீட் குறைவாகவே தொகுதி பங்கீடு நடத்தி முடிக்கப்பட்டது.
இதற்கிடையில் இறுதிவரை விசிகவிற்கு தொகுதி பங்கீடு குறித்து உறுதிப்படுத்தப்படாமலே இருந்தது. முன்னதாக விசிக சார்பில் இரட்டை இலக்க தொகுதிகள் கோரப்பட்டன. ஆனால், திமுக தலைமை அதற்கு மறுப்பு தெரிவித்து, கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் 2 தொகுதிகள் கூடுதலாகச் சேர்த்து 8 தொகுதிகளை ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து முதலில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் யாரும் எதிர்பாராத விதமாக காட்டுமன்னார்கோவிலில் விசிக தலைவர் திருமாவளவனே போட்டியிடுவதாக அறிவித்தார். இந்தச் செய்தி தமிழகம் முழுவதும் தீயாகப் பரவிய நிலையில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆட்சி பங்கு கோருவதற்கான புதிய யுக்தியா? என்று கூட பலராலும் பேசுபொருளாக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தனது நோக்கம் தவறாகச் சித்தரிக்கப்படுகிறது என்று கூறி, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என்று திருமாவளவன்அதிரடியாக அறிவித்தார். மாறாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவர் இளையபெருமாளின் மகன் ஜோதிமணியை காட்டுமன்னார்கோவில் வேட்பாளராக அறிவித்தார். இதனிடையே ஷாநவாஸ், பாலாஜி, பனையூர் பாபு ஆகிய சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுத்த திருமாவளவன், கள்ளக்குறிச்சியில் தனது சகோதரி மகள் மாலதியை வேட்பாளராக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 8 வேட்பாளர்களும் பிரச்சாரம், பரப்புரை என்று தேர்தல் களத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விசிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று (08-04-26) தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில், விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து திருமாவளவன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். பிரச்சாரத்தின்போது, திருமாவளவன் திறந்த வாகனத்தில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது சில விசிக தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் வாகனத்தின் மீது ஏறி கூச்சலிட்டு, செல்ஃபி எடுக்க முயன்று ரகளையில் ஈடுபட்டனர். இதனால் திருமாவளவன் பேச முடியாமல் இடையூறு ஏற்பட்டது.
முதலில் அன்பாக எச்சரித்த திருமாவளவன், பின்னர் கடுமையாகக் கண்டித்தார். ‘கீழே இறங்குங்கள்’ என்று உத்தரவிட்டும், அதைப் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் முண்டியடித்துக்கொண்டு வாகனத்தில் ஏற முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த திருமாவளவன், அங்கிருந்த இளைஞர் ஒருவரின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
