தமிழக வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் சூழலில், தற்போதுதான் பிரச்சாரமே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து மக்களை சந்திக்க களத்திற்குச் சென்றுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து ஊர் ஊராக பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். அதில் தற்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் மாறி மாறி குற்றம்சாட்டி பிரச்சாரம் செய்ய வருவது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை வாங்கிய பின், தனக்கு உதவி செய்த சசிகலாவின் காலையே வாரிவிட்டவர் எடப்பாடி பழனிசாமி என்று உதயநிதி புகைப்படத்தை காட்டி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரம் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது. அத்துடன் புகைப்படத்தையும் அவர் பயன்படுத்தியது சமூக வலைதளங்களில் படு வைரலாக மாறியது. இதனை உணர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரது பிரச்சாரத்தில், “பால்டாயில் குடிச்சது எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுது. அது அப்பவே மேலோகத்திற்குப் போயிருக்கனும். இங்க இருந்துகிட்டு நம்மைப் பாடாபடுத்துது” என்று உதயநிதி குறித்து ஒருமையில் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து உதயநிதியோ, “காலைப் பார்த்தாலே போது எடப்பாடி கீழே விழுந்துவிடுவார்” என்று பதிலடி கொடுத்தார். இது குறித்து மற்றொரு பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நான் காலை தேடிட்டு இருப்பதாக அவர் கூறுகிறார். எங்களுக்கு யாரெல்லாம் உதவி செய்தார்களோ அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது எங்களுடைய பண்பு. அவர் யார் யார் காலில் விழுந்தார் என்று சொல்லவா?” என்று மீண்டும் உதயநிதியை சில வார்த்தைகளால் தாக்கினார்.
இந்த நிலையில் பொன்னேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் சிலர் எடப்பாடி காலில் விழுந்த புகைப்படத்தை காட்டினர். இது கூடியிருந்த அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. அப்போது கூட்டத்திற்கு மத்தியில் பேசிய உதயநிதி, “நானே மறந்தாலும் நீங்க விடமாட்டீங்கிறீங்க.. இப்படி நீங்க கிள்ளி வீட்டு போய்டுறீங்க. அவரு என்ன திட்டுறாரு. இன்னும் கெட்ட வார்த்தையில் மட்டும் தான் என்ன திட்டல. எனக்கு என்ன அனுபவம் இருக்குன்னு கேக்குறாரு. எனக்கு இந்த மாதிரி யார் காலிலும் விழுந்த அனுபவம் இல்லை. சமீபமாக பால்டாயில் குடிச்சிட்டான் பால்டாயில் குடிச்சிட்டான்னு புலம்புறாரு. ஏன் அப்படி சொல்றாருன்னு தெரியல. அவருக்கு எப்போவுமே குறி பால்டாயிலேதான் இருக்கு. இனிமே அவர் எடப்பாடி பழனிசாமி இல்ல… பால்டாயில் பழனிசாமி” என்றார்.
இது ஒருபுறம் இருக்க, எடப்பாடி பழனிசாமி திடீரென முதல்வர் ஸ்டாலினைத் தரம் தாழ்ந்து விமர்சித்திருக்கிறார். தனது பிரச்சாரத்தில், “திமுக ஆட்சியில் வெள்ளம் வந்ததா? புயல் வந்ததா? வரட்சி வந்ததா? கொரோனா வந்ததா? ஒன்னும் வரவில்லை. அப்படி வந்திருந்தால் இந்த முதலமைச்சரே காணாமல் போயிருப்பார். இவரும் அந்த கொரோனாவிலே போயிருப்பார்” என்று பேசியிருந்தார். இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “கொரோனா காலத்தில், மக்களுக்கு தோலோடு தோல் நின்ற முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனை கொரோனா வார்டுக்குள் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். இந்தியாவில் வேறு எந்த முதல்வரும் செய்யத் துணியாத காரியத்தை நம் முதல்வர் ஸ்டாலின் செய்தார். ஆனால், வயிற்றெரிச்சல் பிடித்த பழனிசாமி முதல்வர் குறித்து அவதூறு பரப்புகிறார்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
