திருப்பூர் : ”தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் தமிழகம் இருக்கிறதா?,” என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:கடலுாரில் ஏ.பி.வி.பி. அமைப்பினர் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகுந்து ரகளை செய்துள்ளனர். போலீசார் முன்னிலையிலேயே, அந்த அமைப்பை சேர்ந்த மாணவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். தி.மு.க., கூட்டணி கட்சிகளால், இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
செய்தி சேகரிக்கச் செல்லும் நிருபர்கள் மற்றும் கேமராமேன்களை போலீசார் தாக்குவது தொடர்கிறது; ஊடகத்தினரும் மிரட்டப்படுகின்றனர். தேர்தல் மற்றும் போலீஸ் துறைகளில் தி.மு.க., ஆதரவாளர்கள் அதிகாரிகளாக இருப்பதே ஆகும். இதற்கு முக்கிய காரணம்.
தி.மு.க.,வினரின் கண் அசைவிற்கு ஏற்ப அதிகாரிகள் செயல்படுவதால், தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் தமிழகம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. சில உயரதிகாரிகளை மாற்றினாலும், பல முக்கிய இடங்களில் இன்னும் அதிகாரிகள் மாற்றப்படவில்லை. தேர்தல் நாளன்று வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
