தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், கடந்த 06.04.2026 அன்று மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் சிதம்பரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா பங்கேற்று பேசினார்.
அவர் பேசுகையில், ”இந்து அறநிலையத்துறை ஸ்டாலின் வீட்டு சமையல் அறையாக மாறியுள்ளது. இந்து, முஸ்லீம் இடையே சண்டை இல்லை. ஆனால் அத்தனை சண்டையையும் உருவாக்க பார்க்கிறது திமுக. இந்த தொகுதி வேட்பாளர் கே.ஏ.பாண்டியன் 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார். திமுக மக்களுக்கான பிரச்சனையை பேசாமல், பாஜக உள்ளே வந்துவிடும் என பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த தேர்தல் தமிழகத்திற்கும், டெல்லிக்கும் நடக்கும் தேர்தல் என திமுகவினர் கூறுகின்றனர். இந்த தேர்தல் அதிமுகவிற்கும், திமுகவிற்குமான தேர்தலாகும். இது நல்ல சக்திக்கும், தீய சக்திக்கு நடைபெறும் தேர்தல். இந்த தேர்தலில் போட்டி யாருக்கு என்றால் மக்களுக்கும், போலி வாக்குறுதிகள் அளித்த திமுகவிற்குமான போட்டி. அதிமுக வெற்றி பெற்றால் மக்கள் வெற்றி பெற்றதாகும்” என நடிகை விந்தியா தெரிவித்தார்.
