“செல்லாத காசை பற்றி பேசி என்ன பிரயோஜனம்?”

தமிழக வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் சூழலில், தற்போதுதான் பிரச்சாரமே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து மக்களை சந்திக்க களத்திற்குச் சென்றுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து ஊர் ஊராக பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (09-04-25) ராயபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “கனிமொழியுடைய வழக்கு நிலுவையில் இருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு முடியவில்லை, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு வேலை இல்லை என்கிறார். வேற எங்கே வேலை இருக்கிறது? வேலையாவது கொடுமா? நீயாவது கொடு? வாய் இருக்கிறது, நாக்கு இருக்கிறது என எதை வேண்டுமானாலும் பேசலாமா? நான் ஏற்கெனவே 195 சட்டமன்றத் தொகுதியில் நேரடியாக போய் மக்களை சந்தித்து எழுச்சி பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். இதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களுடைய செல்வாக்கை இழந்துவிட்டார்கள், அதனால் பதறுகிறார்கள். இந்த தேர்தலில் தோல்வி ஜுரம் திமுகவை ஒட்டிக்கொண்டது. அதனால் தான் இப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் கக்கிக் கொண்டிருக்கிறார். கனிமொழி என்னை பற்றி நிறைய பேசியுள்ளார். அவரைப் பற்றி ஏன் பேச வேண்டும், செல்லாத காசை எல்லாம் பேசி என்ன பிரயோஜனம்? 

அந்த கட்சியிலேயே அந்த அம்மாவுக்கு வேலை இல்லை. அந்த கட்சியில் அவரை யாராவது வைத்திருக்கிறார்களா? அந்த கட்சியில் இல்லாதபோதே அந்த அம்மா இந்த மாதிரி பேசுகிறார். பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தால் நாங்கள் என்ன அடிமையா? விருப்பப்பட்டால் கூட்டணி வைக்கிறோம், விருப்பம் இல்லையென்றால் கூட்டணி இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்கவில்லை. ஒவ்வொரு கட்சியும் தேர்தல் வருகின்ற பொழுது நிறுத்தப்படுகின்ற வேட்பாளர் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் கூட்டணி அமைக்கிறோம். அதிமுக கட்சியில் யார் யாரெல்லாம் கூட்டணியில் இருந்தார்களா அவர்களெல்லாம் திமுக தலைமையில் போய் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். திமுக கூட்டணியில் யார் யாரெல்லாம் அங்கம் வைத்து தேர்தல் போட்டியிட்டார்களோ அவர்களெல்லாம் அதிமுகவில் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறி மாறி கூட்டணி வைப்பது தமிழ்நாட்டில் நடப்பது தான். ஆனால் நாம் கூட்டணி வைத்தால் மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இதை தவிர்த்து வேற என்ன பேச முடியும்? ஸ்டாலின் அவர்களே உங்களுடைய அரசியல் நாடகம் தமிழகத்தில் எடுபடாது. மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள். நீங்க எத்தனை பொய்களை மாற்றி மாற்றி பேசினாலும் உண்மையாகாது. அவதூறு பிரச்சாரத்தை பயன்படுத்தி சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார்” என்று பேசினார். 

Source link