நாமக்கல் : ”இபிஎஸ்க்கு தேர்தல் பயம் போய், தேர்தல் ஜூரம் வந்து விட்டது. அதனால், முதல்வரை தரக்குறைவாக பேசுகிறார்,” என, கனிமொழி எம்.பி., தெரிவித்தார்.
திமுக துணை பொதுச்செயலர் கனிமொழி எம்பி நாமக்கல்லில், தி.மு.க., வேட்பாளர் ராணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில், பாஜவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என கூறிய அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தற்போது பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளார். இபிஎஸ்க்கு தேர்தல் பயம் போய், தேர்தல் ஜூரம் வந்து விட்டது. அதனால், கீழ்த்தரமாக தமிழக முதல்வரை பேசி வருகிறார். தேர்தலில் அவருக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவர்.
கடந்த 2016 தேர்தலில், மொபைல் போன் தருவதாக, அதிமுக கூறிய வாக்குறுதி என்ன ஆனது? இந்த தேர்தலில் வெற்றி பெற்று, திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும், ஒவ்வொரு வீட்டுக்கும், 8,000 ரூபாய் கூப்பன் தருகிறோம். உங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
இந்த தேர்தல், தமிழகத்தின் கீழடிக்கும், வட இந்தியாவில் ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூருக்கும் இடையிலான தேர்தல். நிச்சயம் தி.மு.க., வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு கனிமொழி பேசினார்.
