கள்ளக்குறிச்சி : பாஜ தமிழத்தில் வளரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால் தான், திமுக தலைவர் ஸ்டாலினுடன்

கள்ளக்குறிச்சி : பாஜ தமிழத்தில் வளரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால் தான், திமுக தலைவர் ஸ்டாலினுடன் உடும்பு பிடி உறவு வைத்திருக்கிறேன், என, விசி கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.

கள்ளக்குறிச்சி தொகுதி விசி வேட்பாளர் மாலதியை ஆதரித்து, நைனார்பாளையம், பெரியசிறுவத்துார், தென்கீரனுார் ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டுகால ஆட்சியின் பல்வேறு சாதனைகள் இந்திய அளவில் பாராட்டப்படுகிறது. பல மாநில முதல்வர்கள், தமிழக திட்டங்களை பின்பற்றி வருகின்றனர். ஜெ., உயிருடன் இருக்கும் போது, பாஜவுடன் கூட்டணி வைத்து எனது வாழ்வில் மிகப்பெரிய தவறை செய்து விட்டேன் என்றார். ஆனால், இன்று, அவர்களை அதிமுக தோளில் சுமக்கிறது.

லோக்சபா தேர்தலில் மோடியா, லேடியா மோதி பார்க்கலாம் என ஜெயலலிதா துணிச்சலாக சவால் விட்டு கூறினார். பாஜவுடன் எந்த காலத்திலும் அதிமுக கூட்டணி வைக்காது என்றார். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், பாஜவுடன் கூட்டணி வைத்து, அக்கட்சிக்கு ஓட்டுக் கேட்கிறார். தப்பித் தவறி இபிஎஸ் வெற்றி பெற்றால் பாஜகாரர்தான் முதல்வராக இருப்பார். இபிஎஸ்ஐ துாக்கியெறிந்து விடுவார்கள்.

மெல்ல மெல்ல அதிமுகவை விழுங்கும் வேலையை பாஜ செய்கிறது. இதனை அறிந்தும், இபிஎஸ் துணிந்து ஆதரவு கொடுக்கிறார். தமிழகத்தில் பாஜ காலுான்றி விடக் கூடாது என்ற தொலைநோக்கு பார்வையோடு திமுக தலைவர் ஸ்டாலின் வலுவான கூட்டணி அமைத்துள்ளார்.

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என நண்பர் (விஜய்) சொன்னார். ‘விசில்’ அடித்து வாருங்கள், வாருங்கள் என்றும் கூவினார். ஆனால் யாரும் அவருடன் செல்லவில்லை. ‘சீட்’ கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மற்ற அணிக்கு செல்லாமல் திமுகவுடன் பல கட்சிகள் கூட்டணியில் உள்ளது. பாஜ தமிழகத்தில் வளரக்கூடாது என்பதால் தான், திமுக தலைவர் ஸ்டாலினுடன், உடும்பு பிடி உறவு வைத்திருக்கிறேன்.

இந்த தேர்தல் திமுக – அதிமுகவுக்கு இடையே நடக்கும் யுத்தம் இல்லை. பிற்போக்கு சக்திக்கும், முற்போக்கு சக்திக்கும் இடையே நடக்கும் யுத்தம். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கையை வலுப்படுத்த வேண்டும். தேர்தலில் விசி வேட்பாளர் மாலதிக்கு பானை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Source link