ஈரோடு : ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி ம.தி.மு.க., வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக, மதிமுக பொது செயலாளர் வைகோ, கணபதிபாளையம் பிரிவில் பேசியதாவது: நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாழ்படுத்தியது மோடி அரசு. ஆனால் வேலை நாளை அதிகப்படுத்தி தர போவதாக பொய் சொல்கிறார்கள். மத்திய அரசின் எடுபிடியாக தேர்தல் கமிஷன் மாறிவிட்டது. தலைமை செயலாளரை மாற்றிவிட்டு, இபிஎஸ் ஆட்சியில் தனி செயலாளராக இருந்தவரை தலைமை செயலாளராக அறிவித்தது பாரபட்சம்.
திராவிட இயக்கத்தை தமிழகத்தில் தகர்ப்போம். இல்லாமல் செய்வோம் என்று அமித்ஷா பேச தொடங்கி, பாஜ கூட்டம் கொத்தரித்த பிறகே, திராவிட இயக்கத்தை பாதுகாக்க வெறுப்பு, வேறுபாடு மறந்து, ஸ்டாலினுடன் உடன்பாடு வைத்து கொண்டேன். மதிமுகவுக்கு நான்கு இடங்கள் என்பது பற்றி கவலைப்படவில்லை. எண்ணிக்கை முக்கியமில்லை. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக கூட்டணியில் இருக்கிறேன். இவ்வாறு பேசினார்.
