டெஹ்ரான் : போர் நிறுத்த அறிவிப்பு வெளியான பின், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியது. இதனால், கச்சா எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து முடங்கியுள்ளன.
மேற்காசிய நாடான ஈரானுக்கு எதிராக கடந்த பிப்., 28ல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போரை முடிக்க, நம் அண்டை நாடான பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டது. இதையடுத்து, அணுசக்தி செறிவூட்டலை ஏற்றுக்கொள்வது, லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா உட்பட தங்கள் ஆதரவு அமைப்புகள் மீது தாக்குதலை நிறுத்துவது என, 10 நிபந்தனைகளை ஈரான் முன் வைத்தது. இவை ஏற்றுக் கொள்ளக் கூடியவை என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு வார போர் நிறுத்தத்தையும் அறிவித்தார்.
இந்த முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவு தெரிவித்தாலும், ‘இது லெபனானை உள்ளடக்கியது அல்ல; ஹெஸ்பொல்லா அமைப்புக்கு எதிரான போர் தொடரும்’ என, திட்டவட்டமாகக் கூறினார்.
அதன்படி போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் லெபனானுக்கு எதிராக பெரும் வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் துவங்கியது. வெறும், 10 நிமிடங்களுக்குள் 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. தலைநகர் பெய்ரூட் உட்பட தெற்கு லெபனான், கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 254 பேர் உயிரிழந்தனர்; 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது. ஈரானிலிருந்து 17 ஏவுகணைகள் மற்றும் 35 ட்ரோன்கள் மேற்காசிய நாடுகள் மீது ஏவப்பட்டுள்ளன. ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இரண்டு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட, 24 மணி நேரத்துக்குள்ளேயே மேற்காசியா மீண்டும் கொந்தளிக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே, 40 நாட்களுக்கு மேலாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், பல நாடுகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் இவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன.
போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, நிலைமை விரைவில் சீராகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் கப்பல்கள் போக்குவர்தது முடங்கியுள்ளது.
* இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் லெபனானில் 254 பேர் கொல்லப்பட்டனர்; 1,165 பேர் காயமடைந்தனர். இது ஹெஸ்பொல்லா மீதான இஸ்ரேலின் மிகப் பெரிய தாக்குதல்களில் ஒன்று
* இரண்டு வார போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூறியுள்ளன
* ஒப்பந்தத்தை மீறி, அமெரிக்காவும், இஸ்ரேலும், லெபனானை தாக்கியதாக குற்றம் சாட்டி ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளது
* ஜார்முஸ் ஜலசந்தி அருகே, 426 எண்ணெய் கப்பல்கள், 53 எரிவாயு டேங்கர்கள் உட்பட நுாற்றுக்கணக்கான கப்பல்கள் சிக்கியுள்ளன
* ஈரான் முழுதும் இணையத் தொடர்பு 41 நாட்களாக அதாவது 960 மணி நேரத்திற்கு மேல் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜலசந்தியில் கண்ணிவெடிகள்!
போரின்போது ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகள் வைத்துள்ள வரைபடத்தைக் காட்டி, கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு, ஈரான் புதிய மாற்றுப் பாதையை அறிவித்துள்ளது.ஈரானின் ஊடகங்கள் வெளியிட்டுள்ள இந்த வரைபடத்தில், ஜலசந்தியின் போக்குவரத்து பிரிவு பகுதியில் பெரிய வட்ட வடிவில் ஆபத்து மண்டலம் என்று பாரசீக மொழியில் குறிக்கப்பட்டுள்ளது. கப்பல்கள் கண்ணிவெடிகளில் மோதி விபத்துக்குள்ளாவதை தவிர்க்கும் பொருட்டு, பிரதான கப்பல் வழித்தடத்திற்குப் பதிலாக, இனி லாரக் தீவுக்கு அருகிலுள்ள வடக்குப் பகுதியில், ஈரான் நிலப்பரப்புக்கு அருகே செல்ல வேண்டும் என்று இந்த வரைபடம் சுட்டிக்காட்டுகிறது.
