புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், புள்ளாண்விடுதி, செரியலூர், சேந்தன்குடி, நகரம், குளமங்கலம், பனங்குளம், பாண்டிக்குடி, பெரியாலூர், நெய்வத்தளி, மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் 50 முதல் 100 டன் வரை பலாப்பழங்கள் வெளிமாநிலங்கள், வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதே போல கீரமங்கலம், கைகாட்டி, பேப்பர்மில் ரோடு பகுதியில் உள்ள கமிசன் மண்டிகளுக்கும் விவசாயிகள் நேரடியாக விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதில் கீரமங்கலத்தில் உள்ள ஒரு கமிசன் கடைக்கு கடந்த சில வாரங்களாக கீரமங்கலம் மேற்கு பகுதியைச் சேர்ந்த விவசாயி முண்டையன் மகன் மணிவண்ணன், கொண்டு வரும் ஒவ்வொரு பலாப்பழமும் சுமார் 50 கிலோ வரை உள்ளதால் அந்தப் பழங்களை வாங்க வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இதே எடையுள்ள ஒரு பலா பழத்தை திண்டுக்கல் வியாபாரி ரூ.2500 க்கு வாங்கிச் சென்றார். அதே போல இன்று மண்வண்ணன் ஏலக்கடைக்கு கொண்டு வந்த ஒரு பலாப்பழம் சுமார் 48 கிலோ எடை இருந்தது. அந்தப் பழத்தை வாங்க வியாபாரிகள்பலரும் போட்டி போட்ட நிலையில் மதுரையைச் சேர்ந்த வியாபாரி ஆறுமுகம் ரூ.3 ஆயிரத்திற்கு ஏலத்தில் எடுத்தார். ஒரு பலாப் பழம் இவ்வளவு விலைக்கு விற்பனை ஆகிறதை வியசாயிகளும் வியாபாரிகளும் ஆச்சர்யமாக பார்த்தனர்.
