“மற்றவர்களை திட்டி ஓட்டு வாங்க வேண்டிய கட்சி நாம் கிடையாது”

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேமுதிக சார்பில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பிரதாப்பை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் முழுக்க பிரச்சாரம் மேற்கொண்ட வருகிறேன். ஆனால் எனது சொந்த ஊரான குடியாத்தம் வந்தவுடனே எனக்கு புது புத்துணர்ச்சி வருகிறது. என்னோட பூர்வீகம் அருகில் உள்ள செம்பேடு கிராமம் தான். எனது சொந்த மண்ணில் உங்களை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. கேப்டன் இந்த ஊர் மாப்பிள்ளை. குடியாத்தம் தொகுதி மிக மிக முக்கியமான தொகுதி கர்மவீரர் காமராஜருக்கு வெற்றி தந்த தொகுதி. தேசிய கொடியை உருவாக்கிய புனிதமான மண். இந்த நேரத்தில் மண்ணில் மகளாக பெருமையாக சொல்கிறேன். இங்கு உள்ள அனைத்து ஊர்களும் எனக்கு நன்றாக தெரியும்.

எந்த பழசையும் மறப்பவள் கிடையாது உங்கள் அண்ணி என பிரேமலதா பேசிக் கொண்டிருக்கும்போது, இடையில் சவ ஊர்வலம் வருவதை அறிந்த பிரேமலதா தனது பேச்சை நிறுத்தி தொண்டர்களை அமைதியாக இருக்கும்படியும் சவ ஊர்வலத்திற்கு வழி விடும்படியும் கேட்டுக் கொண்டார். அதோடு தன்னைக் கடந்து சென்ற சவ ஊர்வலத்திற்கு கையெடுத்து கும்பிட்டு மரியாதை செலுத்தினார். மேலும் சவ ஊர்வலம் சென்றவரின், “அவருடைய ஆன்மா சாந்தியடைய நாம் எல்லோரும் சேர்ந்து இறைவனை பிரார்த்திப்போம். பொதுவாக நல்ல விஷயத்திற்கு செல்லும்போது சாவு ஊர்வலம் வந்தால் நல்ல சகுனம் என சொல்வார்கள் அந்த வகையில் இப்போது குடியாத்தத்தில் வெற்றி உறுதி” என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “குடியாத்தம் தொகுதியில் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றால் பாதியில் நிற்கும் பணிகள், கூடுதலாக செய்ய வேண்டிய பணிகளை செய்து கொடுப்பார். இங்கு யார் போட்டியிட்டாலும் கேப்டன் தான் களத்தில் இருக்கிறார் என நினைத்து வாக்களிக்க வேண்டும். நிச்சயம் குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெற்று உங்களுக்கு நன்றி சொல்ல வருவேன். உங்களுக்கு இப்போதே வாக்குறுதி அளிக்கிறேன், நெல்லூர் பேட்டை ஏரியை தூர் வாரி சுற்றுலாத்தலமாக மாற்றி படகு சவாரி செய்து தரப்படும், மோர்தானா அணை சுற்றுலா தளமாக மாற்றித் தரப்படும், செதுக்கரை பச்சையம்மன் கோவில் வரை சுற்றுச்சாலை அமைக்கப்படும், நெல்லூர் பேட்டை ஏரிக்கரை முதல் உள்ளி கூட்ரோடு வரை புதிய புறவழிச்சாலை ஏற்படுத்தித் தரப்படும்” என கூறினார்.

தொடர்ந்து, “இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் ஐந்து முனை போட்டி நடைபெறுகிறது. எத்தனை அணி இருந்தாலும் நமது கூட்டணி வெற்றி பெற்று அண்ணன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும். தேமுதிகவிற்கு மட்டுமல்ல திமுக, விசிக, காங்கிரஸ் கட்சிக்காகவும் பிரச்சாரம் செய்து வருகிறேன்” என பிரேமலதா பேசுகையில் கீழே இருந்த கூட்டம் எடப்பாடி பற்றி பேச சொல்லி கேட்டதற்கு, “அண்ணா சொன்னது போல கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொண்ட கட்சி இது. இதை தான் கேப்டன் சொல்லிக் கொடுத்திருக்கிறார். மற்றவர்களை திட்டி ஓட்டு வாங்க வேண்டிய கட்சி நாம் கிடையாது. மற்றவர்கள் திட்டுவதை மூன்றாம் கட்ட பேச்சாளர்கள் பார்த்துக் கொள்வார்கள் நமது வேலை மக்களுக்கு என்ன செய்தும் தொகுதிக்கு என்ன செய்தோம் என்பதுதான். நீங்கள் சொல்லுங்கமா மற்ற கட்சியை நான் திட்டணுமா? அது ஒரு செகண்ட் வேலை. ஆனால் அது நம்ம வேலை கிடையாது. கடவுள் இருக்கிறார், கலைஞர் இருக்கிறார், கேப்டன் இருக்கிறார் தெய்வங்களாக அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.  துளசி வாசம் மாரும் தவசி வாசம் மாறாது அந்த தவசி கண்டெடுத்த பிள்ளை தான் வேட்பாளர் பிரதாப் ஆகவே அவருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

Source link